சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகினையும் உடனடியாக விடுவிக்கவும், மீன்பிடிப் படகுகளின் உரிமையாளர்கள் இலங்கை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, ’கடந்த 22-8-2022 அன்று நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களிலிருந்து மீன்பிடிக்கச்சென்ற 10 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது கடந்த ஜுன் மாதத்திலிருந்து தொடர்ச்சியாக நடைபெறும் ஐந்தாவது நிகழ்வாகும். இலங்கை கடற்படையினரின் இத்தகைய நடவடிக்கைகள் மீனவர்களின் வாழ்வாதாரத்தை வெகுவாகப் பாதிக்கிறது’ என ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
தற்போது வரை தமிழ்நாட்டைச் சேர்ந்த 94 மீன்பிடிப் படகுகள் இலங்கை வசம் உள்ளதாகவும், அவற்றின் உரிமையாளர்கள் இலங்கை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, அவர்களது படகிற்கான உரிமையைக் கோர வேண்டுமென்ற நிபந்தனையின் பேரிலேயே கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர் என்றும், தற்போது இலங்கையில் நிலவும் சூழ்நிலை காரணமாக அவர்கள் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார், முதலமைச்சர்.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சரை, தனது கடிதத்தின் வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க:சொந்தக்கட்சியின் அதிகாரப்போட்டியை மறைக்க திமுகவை விமர்சிக்கின்றனர்... முதலமைச்சர் ஸ்டாலின்