சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட்11) சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் 14 கோடியே 90 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட 100 பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் 19.10.2022 அன்று சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பில் பொதுமக்களின் பேருந்து பயன்பாடு அதிகமாக உள்ள நிலையில் புதிதாக ஆயிரம் பேருந்துகளை வாங்குவதற்கும், 500 பழைய பேருந்துகளை புதுப்பிக்கவும் 500 கோடி ரூபாய் போக்குவரத்து கழகத்திற்கு தமிழக அரசு ஒதுக்கீடு செய்வதாக கூறினார்.
அறிவிப்பின்டி, பொதுமக்களின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்கின்ற வகையிலும், அரசுப் போக்குவரத்து கழகங்களின் பேருந்துகளை மேம்படுத்திடும் வகையிலும், அடிச்சட்டம் நல்ல நிலையிலுள்ள 1000 பழைய பேருந்துகளை 152.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பித்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அதன் முதற்கட்டமாக, விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 16 பேருந்துகளும், சேலம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 15 பேருந்துகளும், கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 37 பேருந்துகளும், திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 32 பேருந்துகளும், என மொத்தம் 100 பேருந்துகள் 14 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று கொண்டு வரப்பட்டது.
தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு இன்றியமையாத போக்குவரத்துச் சேவைகளை குறைந்த கட்டணத்தில் அரசு வழங்கி வருவதால் மாநிலம் முழுவதும் தடையற்ற போக்குவரத்து சேவையை அளித்து வருகிறது. மேலும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு இலவச பேருந்து பயணச் சலுகை, மகளிர் கட்டணமில்லா பயணத் திட்டம், பொதுமக்களின் தேவைக்கேற்ப புதிய பேருந்து வழித்தடங்களை தொடங்கி வைத்தல், பழைய பேருந்துகளை புதுப்பித்தல், புதிய பேருந்துகளை கொள்முதல் செய்தல், பேருந்து பணிமனைகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.எஸ்.எஸ். சிவசங்கர், இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு. பி.கே. சேகர்பாபு, போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. க. பணீந்திர ரெட்டி, இ.ஆ.ப, போக்குவரத்துக் கழகங்களின் மேலாண்மை இயக்குநர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: இரும்புப் பெட்டிக்குள் புதையலா?.. பெட்டியை திறக்கும் பல மணி நேர போராட்டத்தில் கிடைத்தது என்ன?