தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கைத்தறி, கைத்திறன் துணிநூல் மற்றும் கதர்த் துறையின்கீழ் இயங்கும் பட்டு வளர்ச்சித் துறை சார்பில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள பல்நிலை குளிர்பதன அலகு, தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் சார்பில் ஒரு கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விற்பனை நிலையம், தொழிற்கூடம், சுற்றுச்சுவருடன் கூடிய தேன்பொத்தை, இலஞ்சி மண்பாண்ட உற்பத்தியாளர்கள் கூட்டுறவு குடிசைத் தொழில் சங்கத் தொழிற்கூடங்கள் ஆகியவற்றைத் திறந்துவைத்தார்.
இந்த அலகில், கூடுதலாக 20 லட்சம் வெண்பட்டு முட்டைப் தொகுதிகள் பதனம்செய்து ஆண்டுதோறும் விநியோகிப்பதன் மூலம் கூடுதலாக 3000 முதல் 5000 பட்டு விவசாயிகள் பயன்பெற இயலும். மேலும், அரசு வித்தகங்களில் உற்பத்திசெய்யப்படும் வெண்பட்டு முட்டைகளை தமிழ்நாட்டிலேயே பதனம்செய்து பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்வதன் மூலம் வெளி மாநிலங்களிலிருந்து வெண்பட்டு முட்டைகள் பெறப்படுவதைக் குறைக்க இயலும்.
தமிழ்நாடு கதர் கிராமத் தொழில்வாரிய கட்டுப்பாட்டில் செயல்படும் தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டத்தில் அமைந்துள்ள தேன்பொத்தை மண்பாண்ட உற்பத்தியாளர்கள் கூட்டுறவு குடிசைத் தொழில் சங்கத்தின் பழைய தொழிற்கூடங்களை இடித்து, அவ்விடத்தில் 5,500 சதுர அடியில் 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள விற்பனை நிலையம், தொழிற்கூடம், சுற்றுச்சுவருடன் கூடிய தேன்பொத்தை மண்பாண்ட உற்பத்தியாளர்கள் கூட்டுறவு குடிசைத் தொழில் சங்கத் தொழிற்கூடம்,
மேலும், தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் அமைந்துள்ள இலஞ்சி மண்பாண்ட உற்பத்தியாளர்கள் கூட்டுறவு குடிசைத் தொழில் சங்கத்தின் பழைய தொழிற்கூடங்களை இடித்து, அவ்விடத்தில் 2,725 சதுர அடியில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொழிற்கூடம், விற்பனை நிலையத்துடன் கூடிய இலஞ்சி மண்பாண்ட உற்பத்தியாளர்கள் கூட்டுறவு குடிசைத் தொழில் சங்க தொழிற்கூடம் ஆகியவற்றைத் தமிழ்நாடு முதலமைச்சர் திறந்துவைத்தார்.
இப்புதிய தொழிற்கூடங்களில், மண்பானைகள், பூந்தொட்டிகள், சமையல் பாத்திரங்கள், பொம்மைகள் போன்றவற்றை தொழிலாளர்கள் மழைக்காலங்களில் சிரமமின்றி உற்பத்திசெய்யவும், முடிவுற்றப் பொருள்களை இருப்புவைத்து ஆண்டுதோறும் விற்பனை செய்யவும் வசதி செய்துதரப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், ஊரகத் தொழில் துறை அமைச்சர் பா. பெஞ்சமின், கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை வாரிய அமைச்சர் ஜி. பாஸ்கரன், தலைமைச் செயலாளர் முனைவர் ராஜிவ் ரஞ்சன், அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: புதிய போக்குவரத்து பணிமனை கட்டடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்!