கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம். ஹெல்த் கேர் மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொண்டார். அவருக்கு குடலிறக்கம் பிரச்சினை இருந்தது கண்டறியப்பட்டது.
தொடர்ந்து அவரை மருத்துவமனையில் அனுமதியாகி சிகிச்சைப் பெறுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அப்போது, சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரை தொடங்கியிருந்ததால் முதலமைச்சர் பழனிசாமியால் சிகிச்சைப் பெற இயலவில்லை.
வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவருக்குக் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் தொற்று இல்லை எனத் தெரியவந்தது.
இதையடுத்து, அவருக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப்ரல் 20) வீடு திரும்பினார். அவரை மூன்று நாள்கள் முழு ஓய்வு எடுத்துக்கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.