கரோனா பரவல் காரணமாக ஜூலை 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கரோனாவால் 2.34 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 1.72 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,741ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் இன்று (ஜூலை30) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் கரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்துதல் மருத்துவக் குழுவினருடன் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.
அதில் ஜெனீவா உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின்(ICMR ) விஞ்ஞானியும் சென்னை தேசிய தொற்றுநோய் நிலைய துணை இயக்குநருமான டாக்டர் பிரதீப் கவுர் கலந்துகொண்டனர்.
அவர்களுடன் இக் கூட்டத்தில் உலக சுகாதார அமைப்பின் முதுநிலை மண்டல குழுத் தலைவர் டாக்டர் கே.என். அருண் குமார், ஈரோட்டிலிருந்து இந்திய மருத்துவக் கழகத்தின் தலைவர் டாக்டர் சி.என். ராஜா, வேலூரிலிருந்து கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி இயக்குநர் டாக்டர் ஜெ.வி. பீட்டர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
அதில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகின. அதன்படி தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும். ஆகஸ்ட் மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் எவ்வித தளர்வுகளுமின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். தமிழ்நாடு முழுவதும் பொது போக்குவரத்துக்கு தடை என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் க.சண்முகம், சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் கோ. பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு - முழுத் தகவல்கள்