ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சிக்கி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மத்திய முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் டிசம்பர் 3ஆம் தேதி பிணை வழங்கியது. இதனைத் தொடர்ந்து, டிசம்பர் 4ஆம் தேதி 106 நாள்கள் சிறைவாசத்திற்கு பிறகு சிதம்பரம் வெளியே வந்தார். இந்நிலையில், சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கார்த்தி சிதம்பரம், காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு, மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத், புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் நமசிவாயம், நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத், டி. ஜெயக்குமார் உள்ளிட்ட பல மூத்தத் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதில் பேசிய கே.எஸ். அழகிரி, "உலகின் தலைசிறந்த பொருளாதார நிபுணர் சிதம்பரம். வழக்கு தொடர்பாக பேச எனக்குத் தடையில்லை. இந்திராணி முகர்ஜியை மிரட்டி சிதம்பரம் லஞ்சம் வாங்கியதாகக் கூறி அவரை சிறையில் அடைத்தனர். 100 நாள்களில் ஒரு லட்சம் கேள்வி கேட்டிருந்தால் சிதம்பரம் பதிலளித்திருப்பார். ஆனால் அவர்களால் ஒரு கேள்விகூட கேட்க முடியவில்லை. ஏன் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை?
இனி யாருக்காவது புத்துணர்ச்சி பெற வேண்டும் என்றால் திகார் சிறைக்குச் செல்லுங்கள். அவர் தனி மனிதனுக்கு உதவி செய்யமாட்டார். கோடிக்கணக்கான மக்களுக்கு உதவி செய்தார். சிதம்பரத்தின் காலணிகூட சலுகை எதிர்பார்க்காது. என் திறமைக்கு மதிப்பு கொடுங்கள் உழைப்புக்கு மரியாதை கொடுங்கள் என்றுதான் கூறுவார். 'கொடியவர்களின் செயலை தடுக்க கொலைவாளினை எடடா' என பாரதிதாசன் கூறியுள்ளார். ஆனால் மேடையில் வாளை கொடுத்தபோது அவர் அதனை வாங்கவில்லை, ஏனென்றால் கொலைவாளினைவிட பேனா பெரியது என அவருக்குத் தெரியும்.
அடுத்து வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று ராகுல் காந்தி பிரதமராக வருவார். சிதம்பரம் அவருக்கு தளபதியாக இருப்பார். சிதம்பரத்தின் குடும்பத்திற்கு ஏராளமான சொத்துகள் உள்ளன. கையூட்டினை சிதம்பரம் நினைத்துகூட பார்க்க மாட்டார் என கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பாண்டியன் கூறியுள்ளார்" என்றார்.
இதையும் படிங்க: 'வீழ்வேனென்று நினைத்தாயோ, ஒரு நாளும் நாங்கள் வீழமாட்டோம்' - சிதம்பரம் சூளுரை