சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் அமைந்துள்ள 17 ஏக்கர் அரசு நிலத்தை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும், சென்னை கிரிக்கெட் மன்றமும் குத்தகைக்கு எடுத்து பயன்படுத்தி வருகின்றன. 1970இல் தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவுப்படி இத்தகைய நிலங்களுக்கு, சந்தை மதிப்பின் இரு மடங்கில் 7 சதவீதத்தை குத்தகை தொகையாக வசூலிக்க வேண்டும்.
இந்த நிலத்துக்கான குத்தகை ஒப்பந்தம் 1995இல் 20 ஆண்டுகளுக்கு புதுப்பிக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், அதற்கு பதிலாக ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே, குத்தகையை நீட்டிக்கும் வகையில் ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டது.
மீதமுள்ள 15 ஆண்டுகளுக்கு குத்தகைத் தொகை நிர்ணயிப்பதில் குழப்பம் ஏற்பட்டது. இதனால் 2000 முதல் 2015 வரையிலான காலத்தில் வசூலித்திருக்க வேண்டிய 2,081 கோடி ரூபாய் குத்தகை தொகை அரசுக்கு வராமல் உள்ளது.
குத்தகை பிரச்னைக்கு தீர்வு காண வருவாய், நிதி, வணிக வரி, பத்திரப்பதிவு அலுவலர்கள் அடங்கிய மூன்று நபர் குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கும், தமிழ்நாடு அரசுக்கும் புதிய ஒப்பந்தம் ஏற்பட்டது. இதில் 21 வருடங்களுக்கு சேப்பாக்கம் மைதானத்துக்கான குத்தகை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் பழைய பாக்கி தொகை குறித்து தமிழ்நாடு அரசு வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
குத்தகை நீட்டிக்கப்பட்டது குறித்து கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ரூபா குருநாத் பேசினார். அவர், தமிழ்நாடுஅரசுக்கு தனது பாராட்டுக்களை தமிழக கிரிக்கெட் சங்கம் தெரிவித்து கொள்வதாகவும், இதன் மூலம் மைதானத்தில் மூடப்பட்டுள்ள ஐ, ஜே, கே கேலரிகளை மீண்டும் திறக்க முடியும் எனவும் கூறியுள்ளார். தமிழ்நாடு அரசுக்கு விளையாட்டின் மீதுள்ள ஆர்வத்தை காட்டும் செயலாக இது அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: டெஸ்ட் போட்டியை பார்க்க மலிவு விலையில் டிக்கெட் விற்பனை...!