சென்னை: புதுவண்ணாரப்பேட்டை அருணாச்சல ஈஸ்வரர் கோயில் தெருவைச் சேர்ந்தவர்கள் வேளாங்கண்ணி (32), வடிவுக்கரசி (38), வள்ளி (35). இவர்கள், அப்பகுதியில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்தனர்.
இவர்கள் இருவரும் தங்களது கணவர்களைப் பிரிந்து, குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்தனர். வள்ளியும் கணவரை பிரிந்து தனது தாயுடன் வசித்து வந்தார். பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க மூவரும் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லலாம் என முடிவு செய்தனர்.
வெளிநாட்டு பயணத்தால் வந்த வினை
இதற்காக கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த டிராவல் ஏஜென்சியை அணுகினர். அந்த டிராவல் ஏஜென்சியின் வழிகாட்டுதல்படி பாஸ்போர்ட் எடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் கரோனா பரிசோதனைகள் அனைத்தும் முடித்து பக்ரைன் நாட்டிற்கு வீட்டு வேலைக்காக மூவரும் சென்றனர்.
ஆனால் அங்கு தாங்கள் நினைத்து போல வேலைகள் இல்லை என்றும், தங்களை அடித்து துன்புறுத்துவதாகவும் சென்னையில் வசிக்கும் தங்கள் குடும்பத்திற்கு தகவல் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தகவலறிந்து குடும்பத்தினர் வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளரிடம் புகார் அளித்தனர்.
செய்தி வெளியானதால் உயிருக்கு ஆபத்து
இது குறித்து செய்திகள் வெளியான நிலையில், தங்களை மேலும் கொடுமைப்படுத்துவதாகவும், தங்களுக்கு தெரியாமல் புகைப்படம் எடுத்து அச்சுறுத்துவதாகவும் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் காணொலி எடுத்து தனது குடும்பத்தாருக்கு அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் பக்ரைனில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் பெண்களை மீட்டு தரக் கோரி, அவர்களது குடும்பத்தினர் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: பக்ரைனில் சிக்கி தவிக்கும் பெண்களை மீட்டுத் தரவேண்டும் - குடும்பத்தினர் கோரிக்கை!