சென்னை: தமிழகத்தின் சென்னை, கோவை, திருச்சி, மதுரை மாவட்டங்களில் 6வது கேலோ இந்தியா இளைஞா் விளையாட்டுப் போட்டிகள் ஜன.19 முதல் தொடங்கி ஜன.31 வரை நடைபெற உள்ளது. சென்னை ஜவஹா்லால் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள இந்த போட்டியின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு போட்டியினை தொடங்கி வைக்க உள்ளார்.
இதற்காக பிரதமர் மோடி, தமிழகத்திற்கு 3 நாட்கள் பயணமாக நாளை (ஜன. 19) வருகிறார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. ஏறத்தாழ 22 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
மேலும், சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் மாற்றுபாதைகளில் செல்ல போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் வெளியிட்ட செய்தி குறிப்பில், "நேரு விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா யூத் கேம்ஸ் 2023 விளையாட்டு போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைப்பதற்காக நாளை சென்னை வருகிறார்.
இந்நிலையில் பிரதமரின் வருகையையொட்டி சென்னை பெருநகர காவல் துறை சார்பில் 22,000 காவல்துறையினர் மற்றும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக பொதுமக்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.
இதில் குறிப்பாக நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெறக் கூடிய நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளதால் நேரு உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்கம் முதல் ராஜ் பவன் வரை மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் இந்த சாலைகளை கூடுமானவரையில் தவிர்க்க வேண்டும்.
பிரதமரின் சென்னை வருகையையொட்டி ஈவேரா சாலை, தாச பிரகாஷ் முதல் சென்னை மருத்துவக் கல்லூரி வரை மற்றும் அண்ணா சாலை, டிடிகே சாலை ஆகிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் சிறிதளவு காணப்படும் என்பதால் இந்த இடங்களை தவிர்த்து மற்ற சாலைகளை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் வணிக வாகனங்களுக்கும் மதியம் மூன்று மணி முதல் இரவு 8 மணி வரை சென்னையில் குறிப்பிட்ட சாலைகளுக்குள் செல்ல அனுமதி இல்லாமல் அவர்களுக்கு மாற்று வழி என்பது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்று சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னை - மலேசியா விமானத்தில் இயந்திர கோளாறு: விமானியின் துரித செயலால் 160 பேர் உயிர் தப்பினர்..!