சென்னை: சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து இன்று (ஜூலை 25) காலை 6:55 மணிக்கு டெல்லி செல்ல வேண்டிய விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 168 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 174 பேருடன் புறப்படத் தயாராகிக் கொண்டு இருந்தது. இதனைத்தொடர்ந்து பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏறி அமர்ந்து விட்டனர்.
மேலும், விமானி விமானத்தை ஓடுபாதையில் இயக்கத் தொடங்குவதற்கு முன்பு விமானத்தின் இயந்திரங்களை சரிபார்த்தார். அப்போது விமானத்தில் இயந்திரக்கோளாறு இருப்பதை அறிந்தார். இந்த நிலையில் விமானத்தை இயக்கினால் பெரும் ஆபத்து என்று கருதி உடனடியாக, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்தார்.
இதை அடுத்து விமானம் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதோடு விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டு விமானப் பொறியாளர்கள் குழுவினர் விமானத்துக்குள் ஏறி தொழில்நுட்பக் கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலை 8:10 மணிக்கு இந்த விமானம் சென்னையில் இருந்து மீண்டும் புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் விமானத்தில் ஏற்பட்டுள்ள இயந்திரக் கோளாறு குறிப்பிட்ட நேரத்தில் சரிசெய்யப்படவில்லை. இதையடுத்து பயணிகள் அனைவரும் விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர்.
விமானத்தைப் பழுது பார்க்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதையடுத்து சுமார் மூன்றரை மணி நேரம் தாமதத்திற்குப் பிறகு விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு சரி செய்யப்பட்டு காலை 9.30 மணிக்கு விமானம் டெல்லி புறப்பட்டுச் சென்றது.
மேலும், காலை 6:55 மணிக்கு டெல்லி செல்ல வேண்டிய விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக, சுமார் 3 1/2 மணி நேரத்திற்குப் பிறகு தாமதமாக சென்றது. இதனால் டெல்லி செல்ல வேண்டிய 168 பயணிகள் அவதிக்குள்ளாகினர். அதே நேரத்தில் விமானத்தில் ஏற்பட்டுள்ள இயந்திரக் கோளாறை தகுந்த நேரத்தில் விமானி கண்டுபிடித்து எடுத்த நடவடிக்கையால், பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டு 168 பயணிகள் உட்பட 174 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இந்தச் சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது - இருப்பினும் இந்த வழியில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்!