சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இன்று (ஜூன் 11) காலை 9.30 மணியளவில் திருவள்ளூர் நோக்கி செல்லக் கூடிய புறநகர் மின்சார ரயில் சென்று கொண்டிருந்துள்ளது. இந்த நிலையில், இந்த மின்சார ரயில் சென்னை பேசின் பிரிட்ஜ் மேம்பாலத்தை கடந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென பயங்கர சத்தம் கேட்டுள்ளது.
இதனால், பயணிகள் மிகப்பெரிய அச்சம் அடைந்து உள்ளனர். அப்போது பயணிகள் வந்து பார்த்தபோது, மின்சார ரயிலின் கடைசி பெட்டி தண்டவாளத்தை விட்டு தடம் புரண்டு உள்ளது. இதனையடுத்து, உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனிடையே, பயணிகள் அலறி அடித்துக் கொண்டு ரயிலில் இருந்து அவசர அவசரமாக வெளியே இறங்கி ஓடி உள்ளனர்.
அப்போது, அதே தண்டவாளத்தில் மற்றொரு ரயில் வந்து கொண்டு இருந்துள்ளது. இதனைக் கண்ட ஊழியர்கள் உடனடியாக சிவப்புக் கொடியை காட்டி அந்த ரயிலை நிறுத்தி உள்ளனர். மேலும், இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், “சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்த மின்சார ரயிலின் பெண்கள் அமரும் கடைசி பெட்டி தரம் புரண்டதால் ரயில் சேவை பாதிப்படைந்து உள்ளது.
இது குறித்த தகவல் கிடைத்ததும், ரயில்வே அலுவலர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்றனர். மேலும், அவர்கள் இந்த விபத்து எவ்வாறு நடந்தது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் எந்த ஒரு பயணிக்கும் உயிர் சேதமோ அல்லது காயமோ ஏற்படவில்லை.
அதேநேரம், சம்பவ இடத்திற்குச் சென்ற ரயில்வே காவல் துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்” என தெரிவித்தனர். இதனிடையே, ரயில்வே தண்டவாளத்தில் தடம் புரண்ட மின்சார ரயிலின் பெட்டியை அப்புறப்படுத்தும் பணியிலும் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
முன்னதாக, கடந்த ஜூன் 8ஆம் தேதி ஆந்திரா மாநிலத்தின் விஜயவாடா ரயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு ஜன் சதாப்தி விரைவு ரயில் பயணிகள் உடன் வந்தது. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளை இறக்கி விட்ட ஜன் சதாப்தி ரயில், பேசின் பிரிட்ஜ் பணிமனைக்கு சென்று கொண்டிருந்தது.
இந்த நிலையில், 2 ரயில் சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியது. இதனையடுத்து, சுமார் 2 மணி நேரத்திற்குப் பிறகு சீரமைக்கப்பட்டது. மேலும், கடந்த ஜூன் 2ஆம் தேதி ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் அருகே ஹவுரா அதிவிரைவு ரயில், கோரமண்டர் விரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில் இடையே ஏற்பட்ட கோர விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர்.
மேலும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்துக்குப் பிறகு தமிழ்நாடு உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் ரயில் விபத்துகள் மற்றும் விபத்துகளை ஏற்படுத்தும் நோக்கிலான செயல்பாடுகள் நடைபெற்று வருவது தொடர் கதையாகி உள்ளது.
இதையும் படிங்க: Train Accidents: ஜூன் 2 முதல் 9 வரை இந்தியாவில் நிகழ்ந்த ரயில் விபத்துகள்!