இந்தியாவின் தலைநகர் டெல்லியை விட தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் காற்று மாசின் அளவு கூடுதலாக இருப்பதாக அண்மையில் வெளியான புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், சென்னையின் புறநகர் பகுதிகளான மணலி, எண்ணூர், மாதவரம் ஆகிய பகுதிகளிலும் தற்போது காற்று மாசு அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக அப்பகுதி மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத் திணறல், ஒவ்வாமை போன்ற உடல் உபாதைகள் ஏற்படுவதோடு மட்டுமில்லால்மல் வாகன ஓட்டிகளும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், நெடுஞ்சாலைகளில் மட்டுமின்றி குடியிருப்புப் பகுதிகளிலும் காற்று மாசால் தங்கள் வீடுகளை விட்டு வெளியில் வரவே மக்கள் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.
வட சென்னைப் பகுதியிலுள்ள அனல் மின் நிலையங்கள், தனியார் தொழிற்சாலைகள் போன்றவற்றிலிருந்து வெளியேற்றப்படும் நச்சு கரும்புகை காற்றில் கலப்பதால் மரம், செடிகள் ஆகியவை குறுகிய காலத்திற்குள்ளாகவே கருகிப்போகும் சூழலும் நிலவுகிறது.
இதேநிலை தொடர்ந்தால் வட சென்னைப் பகுதியில் மனிதர்கள் வசிக்க முடியாத நிலை ஏற்படும் என்பதால், மத்திய - மாநில அரசுகள் காற்று மாசைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் வாசிங்க: மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க விருப்பம் தெரிவித்த சிவசேனா