சென்னை: சென்னை மாநகராட்சியில் 10 மண்டலங்களில் தெரு விளக்கு பராமரிப்புக்காக 27 கோடி ரூபாய்க்கு விடப்பட்ட டெண்டரை மாநகராட்சி ரத்து செய்துள்ளது.
மாநகராட்சியில் உள்ள தெரு விளக்கு செயல்பாடு மற்றும் பராமரிப்பிற்காக பிப்ரவரி 19, 2021 முதல் பிப்ரவரி 18, 2022 வரை ஒரு ஆண்டிற்கு டெண்டர் விடப்பட்டது.
அவ்வாறு விடப்பட்ட டெண்டர் பராமரிப்பு சரியில்லாத காரணத்தினால், ஆகஸ்ட் 2ஆம் தேதி மண்டலம் 1,2,3,4,6,7,11,12,14 மற்றும் 15 ஆகிய 10 மண்டலங்களில் ரூ. 27.3 கோடிக்கு விடப்பட்ட டெண்டரை மாநகராட்சி ரத்து செய்துள்ளது.
மாநகராட்சி விளக்கம்
தெரு விளக்குகளை பராமரிக்க ஐடிஐ தகுதியுடன் தேவையான எண்ணிக்கையிலான மின்பொறியாளர்களை ஒப்பந்ததாரர்கள் வழங்கவில்லை. விளக்குகள் பழுதானால், உடனடியாக மாற்றப்படுவதில்லை. தெருவிளக்குகளை சரிசெய்யத்தேவையான பொருட்கள், ஏணிகளை வழங்கவில்லை. இதன் காரணமாக டெண்டர் ரத்து செய்ததாக மாநகராட்சி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
முறையான பதில் இல்லை
அதுமட்டுமின்றி ஒப்பந்ததாரர்கள் தெருவிளக்குகளைப் பராமரிக்க 27 வகையான பொருட்களை வழங்க வேண்டும், ஆனால் அவ்வாறு வழங்காமல் தரமற்ற பொருட்கள் வழங்குகின்றனர்.
மோசமான செயல்பாடு இருந்தால் ஒப்பந்ததாரர்களுக்கு விதிக்கப்படும் அபராதமும் குறைவாக உள்ளதால், இதைப் பயன்படுத்தி செயல்படுகின்றனர். இதுகுறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளித்தும் ஒப்பந்ததாரர்கள் முறையான பதிலளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
புதிய திட்டம்
தற்போது தெரு விளக்குகளை பராமரிப்பதற்காக மாநகராட்சி ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.
அதன்படி ஒப்பந்ததாரர்கள் வேலைக்கு ஆட்கள், ஏணி வாகனங்களை வழங்க வேண்டும், அதே நேரத்தில் மின்சாரத்துறை ஒப்பந்ததாரர்கள் அனைத்துப் பொருட்களையும் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மாநகராட்சிக்கு தெரு விளக்குகளைப் பராமரிப்பதில் ஆகும் செலவு 20.57 கோடி ரூபாய் குறையும்.
தற்போது ரத்து செய்த டெண்டருக்குப் புதிதாக இ-டெண்டர் விடப்படும் எனவும் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பள்ளிகள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து கல்வித்துறை ஆலோசனை