சென்னை பழைய பல்லாவரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன் (40). இவர் அதே பகுதியில் வாடகைக்கு ஆட்டோ ஓட்டிவருகிறார். இந்நிலையில், பல்லாவரம் பழைய டிரங்க் சாலையில் அவர் ஆட்டோவில் சவாரிக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது, இளைஞர் ஒருவர் சவாரி செல்ல வேண்டும் ஆட்டோவை ஓட்டுங்கள் எனக் கூறியுள்ளார்.
இதையடுத்து, ஆட்டோ சிறிது தொலைவு சென்றவுடன் பின் இருக்கையில் அமர்ந்திருந்த அந்த இளைஞர் திடீரென வெங்கட்ராமன் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவரது சட்டைப்பையில் வைத்திருந்த இரண்டாயிரம் ரூபாய் பணம், செல்ஃபோன், கைக்கடிகாரம் ஆகியவற்றைப் பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார்.
இதைக் கண்ட வெங்கட்ராமன் சத்தம் போட்டுள்ளார். அவரது அலறல் கேட்ட பொதுமக்கள் கொள்ளையனை மடக்கிப் பிடிக்க முயன்றபோது, அந்தக் கொள்ளையன் பொதுமக்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இது குறித்து பல்லாவரம் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து வேம்புலியம்மன் கோயில் தெருவில் பதுங்கியிருந்த கொள்ளையனை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், கன்டோன்மென்ட் பல்லாவரம், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த வினோத்குமார் (எ) குள்ளன் (23) என்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, அவனிடமிருந்த விலையுயர்ந்த இருசக்கர வாகனம், செல்ஃபோன், இரண்டாயிரம் ரூபாய் ரொக்கம், தங்கச் சங்கிலி ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல்செய்ததுடன் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
மேலும் கைதுசெய்யப்பட்ட கொள்ளையன் குள்ளன் மீது பல காவல் நிலையங்களில் அடிதடி, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:’தமிழ்நாட்டில் கொரோனா பரவாது என உறுதியாகச் சொல்ல இயலாது’