சென்னை: இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளுக்கும், மருத்துவமனை நோயாளிகளுக்கும் பைபிளை வழங்கி ஸ்கிரிப்ச்சர் யூனியன் டிரஸ்ட் என்ற நிறுவனம் பயிற்சி அளித்துவருகிறது. இந்த மினிஸ்ட்ரியில் கடந்த 17 ஆண்டுகளாக ஆங்கிலத்துறை செயலாளராக இருந்து வருபவர் கீழ்பாக்கத்தில் வசித்துவரும் சாம் ஜெய்சுந்தர்.
ஜோயல் கிப்ட்சன், எழுத்தாளர் நிவேதா லூயில் உள்ளிட்டோர் ஸ்கிரிப்ச்சர் யூனியனில் செயலாளராக பணியாற்றிவரும் சாம் ஜெய்சுந்தர் பயிற்சி வழங்குவதற்காக செல்லும் பள்ளிகளில் பல மாணவிகளிடம் தவறாக நடக்க முயற்சித்ததாகவும், தகாத முறையில் மாணவிகளிடம் உரையாடியதாகவும் அதிர்ச்சிகர தகவல்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.
மேலும், பாதிக்கப்பட்ட பல மாணவிகள் சாம் ஜெய்சுந்தர் தகாத முறையில் மேற்கொண்ட உரையாடல்களின் தொகுப்பை ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். சாம் ஜெய்சுந்தர் உடன் அதே நிறுவனத்தில் மத போதகர்களாக பணியாற்றிவரும் ரூபன் கிளமெண்ட் மீதும் பாதிக்கப்பட்ட மாணவிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மாணவிகளுக்கு ஆதரவாக பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்ட நிலையில், ஸ்கிரிப்ச்சர் யூனியன் கமிட்டி சாம் ஜெய்சுந்தரை பணியிடை நீக்கம் செய்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக அந்நிறுவனத்தினர் சென்னை காவல் ஆணையரிடமும், அயனாவரம் காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தனர்.
மேலும், குற்றம் சுமத்தப்பட்டவர்களிடம் மேற்கொண்டுவரும் விசாரணை முடிந்த பிறகு உரிய ஆதாரங்களுடன் காவல் துறையினரிடம் விரிவான புகார் அளிக்கவுள்ளதாக ஸ்கிரிப்ச்சர் யூனியன் தரப்பில் முன்னதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில், மத போதகரான சாமூவேல் ஜெய் சுந்தர், ரூபன் கிளமெண்ட் ஆகியோர் மாணவிகளிடம் ஆபாசமாக உரையாடியது உண்மை எனத் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, மதபோதகர் இருவர் மீது பாலியல் தொல்லை, ஆபாசமாக உரையாடுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் அயனாவரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மூன்று சகோதரிகள் மீது திராவகம் வீச்சு”- கடும் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவு