சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நேற்று மாலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. பின்னர், அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டது.
இந்நிலையில், இன்று(வியாழக்கிழமை) காலை மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஈவிகேஎஸ் இளங்கோவனை மருத்துவமனைக்கு நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார். மேலும் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
சற்றுமுன்னர், ஈவிகேஎஸ் இளங்கோவன் குறித்து மருத்துவமனை சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், அவரது உடல் நிலையை சீராக இருப்பதாகவும், தற்போது சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ள அவர் விரைவில் வீடு திரும்புவார் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேராவின் மறைவால் அங்கு தேர்தல் நடைபெற்றது. திருமகனின் தந்தையான ஈவிகேஎஸ் இளங்கோவன் தேர்தலில் போட்டியிட்டு தமிழக சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும் ஏற்கெனவே இதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.
இதையும் படிங்க:லஞ்சம் கேட்கும் மாவட்டக் கல்வி அதிகாரிகள்; தனியார் பள்ளிகள் சங்கத்தினர் புகார்!