சென்னை போரூரில் தாமஸ் தெருவைச் சேர்ந்தவர் சிபிராஜ் (38). இவரது 2வது மனைவி சைலஜா(29), இவர்களுக்கு ஸ்ரீலட்சுமி(3 1/2), என்ற மகளும் ஆதிதேஷ் (2) என்ற மகனும் உள்ளனர். சிபிராஜ் சினிமா பைனான்சியராக இருந்து வந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார். கணவன் இறந்தபிறகு குடும்பம் நடத்துவதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்த சைலஜா கடன் வாங்கி தனது இரண்டு குழந்தைகளையும் வளர்த்து வந்துள்ளார். இதனிடையே, கடன் கொடுத்தவர்கள் கொடுத்த கடனை திருப்பி கொடுக்குமாறு சைலஜாவிற்கு நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது.
இதனால், மன உளைச்சலுக்கு ஆளான சைலஜா பெற்ற குழந்தை என்றும் பாராமல் நேற்றிரவு ஸ்ரீலட்சுமி, ஆதிதேஷ் ஆகிய இருவருக்கும் விஷம் கொடுத்து கழுத்தை நெரித்து கொலை செய்து, தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்நிலையில், சிபிராஜின் நண்பர் ஜினைத் என்பவர் கேரளாவிலிருந்து சிபிராஜின் வீட்டிற்கு இன்று காலை வந்தபோது சிபிராஜின் வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. பல முறை கூப்பிட்டும் கதவு திறக்காததால் சந்தேகமடைந்த அவர், ஜன்னல் வழியாகப் பார்த்த போது குழந்தைகளும், சைலஜாவும் மயங்கிய நிலையில் கிடப்பது தெரியவந்தது.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று 3 பேரையும் ஆம்புலன்ஸ் உதவியுடன் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தைகள் இருவரும் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். சைஜா தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுரவாயல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.