சென்னை: தலைமைச் செயலகத்தில், சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு அரசு, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை துறைமுக பொறுப்புக் கழகம் மற்றும் இந்திய கடற்படை இடையே கையெழுத்தானது.
இத்திட்டத்தின்படி, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான 20.565 கிலோ மீட்டர் நீளத்திற்கு 5 ஆயிரத்து 855 கோடி ரூபாய் மதிப்பில் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை அமைக்கப்பட உள்ளது.
இதன் முதல் அடுக்கில் சென்னை துறைமுகம் முதல் கோயம்பேடு வரை உள்ளூர் வாகனங்கள் மட்டும் பயணிக்கும் வகையிலும் , 13 இடங்களில் வாகனங்கள் ஏறும், இறங்கும் சாய் தளங்களும் அமைக்கப்பட உள்ளது. இரண்டாவது அடுக்கில் துறைமுகம் முதல் மதுரவாயல் வரை இருபுறமும் கனரக வாகன போக்குவரத்து மட்டும் அனுமதிக்கப்பட உள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்த கையெழுத்து நிகழ்வின்போது மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் டாக்டர் வி.கே.சிங், பொதுப்பணி, தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ வேலு, தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: பிட் காயின் முதலீடு ஏமாற்று வேலை- டிஜிபி சைலேந்திரபாபு