சென்னை: திருமங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள தனியார் வணிக வளாகம் அருகே, நிறுத்திச் சென்ற தனது பல்சர் ரக பைக் காணாமல் போனதாக, கோகுல் என்பவர் திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அப்புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அப்போது, பைக் காணாமல் போனதாகக் கூறப்படும் பகுதிகளில் இருக்கும் சிசிடிவு காட்சிகளை கைபற்றி ஆய்வு மேற்கொண்டனர். அதில் ஏற்கனவே திருட்டு வழக்கில் தொடர்புடைய கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த கலிமுல்லா என்கிற அலி (19) மற்றும் அவரது கூட்டாளியான தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிஹரன் (24) ஆகியவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
பின்னர், அவர்களைத் திருமங்கலம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், இருவரும் திருமங்கலம், அரும்பாக்கம், அமைந்தகரை, அண்ணாநகர், கோயம்பேடு, மதுரவாயல், முகப்பேர், புழல், கொரட்டூர், வடபழனி, கே.கே.நகர், பேசின்பிரிட்ஜ், செம்பியம், பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் வெளி மாவட்டங்களிலும் விலை உயர்ந்த பைக்குக்களை திருடி விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் மருத்துவர் அத்துமீறியதாக புகார்!
மேலும், இருவரும் சென்னையில் திருடியை இருசக்கர வாகனங்களை போலீசார் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதற்காக, ரூபாய் 40 லட்சம் மதிப்பிலான 32 பைக்குக்களை தஞ்சாவூர் மாவட்டம், பணங்குடிதோப்பு என்கிற மீனவ கிராமத்தில், மண்ணுக்குள் பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது.
பின்னர் இருவரும் மறைத்து வைத்திருந்த விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்ய, திருமங்கலம் குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் மண்ணுக்கு அடியில் புதைத்து வைத்திருந்த இருசக்கர வாகனங்களை கைபற்றி, சென்னை கொண்டு வந்தனர்.
அதனைத் தொடர்ந்து, ரூபாய் 40 லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனங்களைத் திருடிய இரு இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, பின்னர், புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், கைப்பற்றப்பட்ட இருசக்கர வாகனங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கு பணிகளை மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: காட்பாடி அருகே தொடர் திருட்டில் ஈடுபட்ட சிறுவன் கைது..! 9 வாகனங்கள் பறிமுதல் செய்த போலீசார்..!