காவலர்கள் கரோனா, மழைக்காலம் எனத் தொடர்ந்து இரவு பகல் பாராமல் உழைத்துவருவதால், பணிச்சுமை அதிகமாகி மனஅழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதனால், காவலர்களின் மன அழுத்தத்தைப் போக்கும் வகையிலும் குறைகளைக் கேட்பதற்காகவும் சென்னையில் உள்ள அனைத்து காவல் மாவட்ட சரகத்திலும் காவல் ஆய்வாளர் ஒருவரை நோடல் அலுவலராக நியமிக்க வேண்டும் எனக் காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது குறித்து அனைத்து துணை ஆணையர்களுக்கும் ஆணையர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "காவலர்கள், அவரது குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள சலுகைகள் குறித்து அனைத்துக் காவலர்களுக்கும் தெரிவிக்க வேண்டும். காவலர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், குறைகளைக் குறிப்பிட்ட நோடல் அலுவலர் உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்.
அதுமட்டுமின்றி காவலர்களின் உடல்நலம் குறித்து விசாரிக்கவும், காவலர்களின் மருத்துவக் காப்பீடு, ஓய்வூதியம் உள்ளிட்ட பணிகளை அந்த அலுவலர் கவனிக்க வேண்டும். இப்பணிகள் குறித்து அந்தந்த காவல் மாவட்ட துணை ஆணையர் வாரம் ஒருமுறை ஆய்வு நடத்த வேண்டும்.
எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த முழு அறிக்கையையும் காவல் ஆணையர், தலைமையக கூடுதல் ஆணையரிடம் மாதம் ஒருமுறை சமர்ப்பிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: "கரோனாவல் நன்மை நிகழ்ந்துள்ளது" - சென்னை காவல் ஆணையர்