சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த ஆயுதப்படை தலைமைக் காவலர் சதீஷ் பாபு என்பவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது குடும்பத்தினரைச் சந்தித்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆறுதல் தெரிவித்தார். மேலும், தேவையான உதவிகளைச் செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " கரோனா தொற்றின் இரண்டாவது அலையில் 1,500க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 350 பேர் சிகிச்சையில் இருக்கின்றனர். சென்னை காவல்துறையில் இதுவரை 84 விழுக்காடு பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. விரைவில் முழுமையாக அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிக்கப்படும். பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரத்தில், தற்போது மேலும் இருவர் புகார் அளித்துள்ளனர். அது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது போக்சோ வழக்குப் போடப்பட்டுள்ளது. இது போன்ற குற்றங்கள் தனி நபர் சம்மந்தப்பட்டது அல்ல சமூகத்திற்கு எதிரான குற்றம். இவ்வழக்கைத் தீவிரமாக விசாரித்து வருகிறோம்.
மற்றொரு பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்தும் தாமாக முன்வந்து காவல் துறை விசாரித்து வருகிறது. இதேபோன்று சமூக வலைதளங்களில் பதிவிடும் பள்ளிகள் மீதான பாலியல் புகார்களை சைபர் கிரைம் காவல் துறை கண்காணித்து வருகிறது" எனத் தெரிவித்தார்.