சென்னை மாநகராட்சியில் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட விருப்பமுள்ள தன்னார்வலர்கள் விண்ணப்பிக்கலாம் என மாநகராட்சி சார்பாக அறிவிப்பு வெளியிட்டனர். இதனால் கல்லூரி மாணவ, மாணவிகள் தன்னார்வலராக பணிபுரிய விருப்பம் தெரிவித்து கரோனா தடுப்பு பணியில் மாநகராட்சி ஊழியர்களுடன் சேர்ந்து பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், தன்னார்வலராக மாநகராட்சியில் பணிபுரிந்து வரும் தனியார் கல்லூரி மாணவியிடம் உதவி பொறியாளராக உள்ள கமலக்கண்ணன் என்பவர் ஆபாசமாக செல்போனில் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
அந்த ஆடியோவில், மாநகராட்சியில் உதவி பொறியாளர் என்கிற பொறுப்பு காவல் துறையில் உதவி ஆணையர் பொறுப்புக்கு சமம். மாதந்தோறும் 78 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறேன். எனவே காதல் செய்யுமாறு பெண்ணிடம் கமலகண்ணன் பேசியிருந்தார்.
அதன் அடிப்படையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல் துறையினர் கமலக்கண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சென்னை மாநகராட்சி அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில் அப்பெண் குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், "கமலக்கண்ணன் தவறான எண்ணத்தில் என்னிடம் பேசியது இல்லை. அவர் எனது குடும்ப வறுமையை புரிந்து கொண்டவர். மேல்படிப்பிற்காக உதவி செய்தவர். எதிர்கால ஆலோசனை குறத்து தன்னிடம் அலைபேசியில் பேசுவார். நாங்கள் பேசிய ஆடியோவை சிலர் திருடி சித்தரித்துள்ளனர். கமலக்கண்ணன் ஆபாசமாக பேசியதாக நான் புகார் அளிக்கவில்லை. கமலக்கண்ணனை பழிவாங்க சிலர் தன்னை பகடை காயாக பயன்படுத்தியுள்ளனர்" என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டவர் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி!