சென்னை: பெருநகர சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும்பொருட்டு, மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்பட்டது.
கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் இந்த ரயில் சேவையின் கட்டணம் அதிகமாக உள்ளது, அதன் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் எனப் பல்வேறு பயணிகள் அரசிற்கு கோரிக்கை விடுத்துவந்தனர்.
இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மெட்ரோ ரயிலின் கட்டணத்தைக் குறைக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, க்யூ.ஆர். கோடு (QR Code) மற்றும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தொடுதல் இல்லா மதிப்புக் கூட்டு பயண அட்டை மூலம் பயணிப்பவர்களுக்கு மேலும் கூடுதலாக அனைத்து பயணச்சீட்டுகளுக்கும் அடிப்படைக் கட்டணத்திலிருந்து 20 விழுக்காடு தள்ளுபடி அளிக்கப்படும்.
தற்போதுள்ள கட்டம்-1 இன் 45 கி.மீ. வழித்தடப் பகுதிகளுக்கான கட்டணம் 100 ரூபாய் ஆகும். தற்போது தொடக்கப்பட்டுள்ள வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான 9 கி.மீ. நீள கூடுதல் வழித்தடத்திற்கும் சேர்த்து மொத்தம் 54 கி.மீ. வழித்தடத்திற்கும் அதே 100 ரூபாயாகவே இருக்கும்.
ஞாயிற்றுக்கிழமை, பொது விடுமுறை நாள்களில் வழக்கமான கட்டணத்திலிருந்து 50 விழுக்காடு தள்ளுபடி செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த ஆணை வரும் 22ஆம் தேதிமுதல் அமலுக்கு வரும் எனவும், மக்கள் அனைவரும் இதனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.