chennai metro: சென்னை மெட்ரோ ரயில்களில் ஒரே நாளில் 2.66 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், வெளியூரில் இருந்து வரும் பயணிகளுக்கும் ரயிலில் பயணம் செய்யும்போது ஒரு நம்பகமான, பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது.
அதன் பயனாக சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இது பயணிகளின் நல்வரவேற்பை பெற்றுள்ளதாகவும், பயன்பாடும் அதிகரித்து வருவதையும் காட்டுகிறது.
பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, இதுநாள் வரை இல்லாத அளவுக்கு ஜன.13ஆம் தேதி அன்று ஒரே நாளில் மட்டும் அதிகபட்சமாக 2,66,464 பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். இதில் அதிகபட்சம் புரட்சித்தலைவர் டாக்டர்.எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்தில் 21,731 பயணிகளும், கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் 14,649 பயணிகளும், திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் 13,607 பயணிகளும், விமான நிலையம் மெட்ரோ இரயில் நிலையத்தில் 12,909 பயணிகளும் பயணம் செய்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரயில்களில் ஜன.13ஆம் தேதி 2,66,494 பேரும், ஜன.14ஆம் தேதி 1,62,525 பேரும், ஜன.15ஆம் தேதி 1,08,160 பேரும், ஜன.16ஆம் தேதி 1,34,167 பேரும், ஜன.17ஆம் தேதி 1,65,399 பேரும் பயணம் செய்துள்ளனர். மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ இரயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி" என குறிப்பிடப்பட்டது.
மேலும், பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நிறைவு பெற்றதைத் தொடர்ந்து இன்று காலை (ஜன.18) வெளியூர்களுக்குச் சென்ற மக்கள் சென்னை திரும்பினர். இதன் காரணமாக சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் பயணம் செய்தனர்.