சென்னை: தமிழ்நாட்டில் அக்டோபர் 29ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. ஆரம்பத்தில் குறைவான மழை பெய்த நிலையில், நவம்பர் மாதம் இறுதியில் அதிகமான மழை பெய்தது. டிசம்பர் மாதம் வங்கக்கடல் பகுதியில் 'மாண்டஸ்' புயல் உருவாகி டிச.10ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவிற்கும், மாமல்லபுரத்திற்கும் இடையே கரையை கடந்தது.
அதன் பின்னர் தமிழ்நாட்டில் ஒரு சில நாட்களாக கனமழை பெய்தது. குறிப்பாக டிச.25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று கனமழை பெய்தது. இதனை தொடர்ந்து வரும் நாட்களில் லேசான மழை பெய்து வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
“கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தென்தமிழக மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை (டிசம்பர் 31) முதல் ஜன.3ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கடல் போல் காட்சியளிக்கும் பூண்டி நீர்த்தேக்கம்