சென்னை: தமிழகத்தில் மழை வாய்ப்பு குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (ஏப்.28) ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று (ஏப்.28) ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை (ஏப்.29) ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஏப்.30ஆம் தேதி அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மே 1ஆம் தேதி பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாமக்கல், சேலம், தருமபுரி மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மே 2ஆம் தேதி பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்) 11, கொடைக்கானல் (திண்டுக்கல்) 8, ஈச்சன்விடுதி (தஞ்சாவூர்) 5, சோத்துப்பாறை (தேனி) 4, மஞ்சளாறு (தேனி), கயத்தாறு (தூத்துக்குடி), கயத்தாறு ARG (தூத்துக்குடி), பெரம்பலூர், கடம்பூர் (தூத்துக்குடி), ராமநதி அணைப்பிரிவு (தென்காசி), மாஞ்சோலை (திருநெல்வேலி) ஆகிய பகுதிகளில் தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும், கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை” என குறிப்பிடப்பட்டுள்ளது.