சென்னை: பெங்களூரு காவல் துறை பெயரில் டிவிட்டர் கணக்கு ஒன்று தொடங்கி, அதில் ஐபிஎல் ஆட்டம் குறித்தும் மற்றும் ஒவ்வொரு ஆட்டத்தின் போதும் எடுக்கப்படும் ரன்கள் குறித்தும் பதிவுகளை பதிவிடப்பட்டு வந்துள்ளது. இது வைரலாகவே இந்த போலி ட்விட்டர் கணக்கு தொடர்பாக பெங்களூர் காவல் துறை கவனத்திற்கு சென்றது. பெங்களூர் சைபர் கிரைம் காவல் துறையில் இருக்கும் ரவி என்கிற காவலர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கினார்.
விசாரணையில் சமூக வலைதளப் பக்கம் பயன்படுத்தப்படும் கணினி மற்றும் அதன் ஐபி முகவரியை வைத்து போலி ட்விட்டர் கணக்கு எங்கிருந்து பதிவுகள் பதிவிடப்படுகிறது என்பதை கண்டறிந்தனர். சென்னை சேத்துப்பட்டு பகுதியில் உள்ள முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர் மகேஷ் குமார் இந்த போலி சமூக வலைதளக்கணக்கு உருவாக்கியது தெரியவந்துள்ளது.
Blrcitypolicee என்ற பெயரில் போலி சமூக வலைதளக்கணக்கு உருவாக்கி ஐபிஎல் ரன்களை பதிவிட்டு வந்துள்ளார். உண்மையான பெங்களூரு காவல் துறை ட்விட்டர் கணக்கை போன்று இருந்த காரணத்தினால் பலரும் பின் தொடர்ந்து உள்ளனர். சாதாரணமாக இவ்வாறு பதிவிட்டு வரும்போது அதிக அளவு லைக்குகள், சேர்கள் இல்லாத காரணத்தினால் பெங்களூரு காவல் துறை பெயரில் விளையாட்டாக ட்விட்டர் கணக்கு தொடங்கி ஐபிஎல் ரன்கள் பதிவிட ஆரம்பித்ததாக மகேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
அதன்பிறகு அதிகளவு லைக்குகள் மற்றும் சேர்கள் கிடைத்த காரணத்தினால் தொடர்ந்து அந்த கணக்கை பயன்படுத்தி ஐபிஎல் விளையாட்டுகள் தொடர்பாகவும் ஐபிஎல் ரன்கள் பதிவிட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையைச் சேர்ந்த மகேஷ் குமார், சென்னை மருத்துவக் கல்லூரியில் பயின்று வருகிறார். தொடர்ந்து, மகேஷ் குமாரை பெங்களூர் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லைக் மற்றும் சேருக்காக விளையாட்டாக இதுபோன்று செய்ததாக மருத்துவ மாணவன் விசாரணையில் தெரிவித்துள்ளார். மேலும் சென்னை மாணவன் பெங்களூரு ஐபிஎல் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் தீவிர ரசிகன் என்பதாலும், தன் அணியை தோற்கடித்த ஐபிஎல் அணிகளை கேலி, கிண்டல் செய்து மீம்கள் போடவும், பிரபலமான கிரிக்கெட் பிளேயர்களை ட்ரோல் செய்வதற்கும் இந்த சமூக வலைதளக்கணக்கை உருவாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தன்னை இந்த சமூக வலைதளப்பக்கத்தை வைத்து ட்ரோல் செய்து விடக் கூடாது என்பதற்காக பெங்களூரு காவல் துறை ட்விட்டர் கணக்கை போலியாக உருவாக்கி பயன்படுத்திக் கொண்டதாகவும் கூறியுள்ளார். பெங்களூர் சைபர் கிரைம் காவல் துறையினர், மகேஷ் குமாருக்கு நோட்டீஸ் வழங்கிய நிலையில் விசாரணைக்கு தேவைப்படும்போது ஆஜராக வேண்டும் எனக் கூறி அனுப்பி வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: chennai crime news today: கடன் பாக்கியைத் தராததால் முட்டை வியாபாரி கடத்தல் - கோயில் குருக்கள் தூக்கிட்டு தற்கொலை!