சென்னை: சென்னை மருத்துவக் கல்லூரியின் இருதயவியல் துறையின் பேராசிரியர் ஜஸ்டின்பால், கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் இருதய நோய் பாதிப்புகள் குறித்து ஆய்வில் கண்டுடிப்பித்தவற்றை ஐரோப்பியன் ஹார்ட் இதழில் (European Heart Journal) வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து பேராசிரியர் ஜஸ்டின் பால் ஈடிவி பாரத் செய்திகளுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அப்போது பேசிய பேராசிரியர் ஜஸ்டின்பால், “சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரக்கூடிய கர்ப்பிணிகளை, 2016ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையில் ஆய்வு செய்தோம். அவர்களில் இருதய நோய் உள்ள 1,005 பெண்களை ஆய்வு செய்தோம். அதன் மூலம் 1,029 பிரசவங்களை பார்த்தோம்.
அதில் 65 சதவீதம் பெண்களுக்கு பிறந்த பின்னர் வரக்கூடிய இருதய நோய் இருந்தது. பெண்களுக்கு பிரசவத்திற்குப் பின்னர் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்தோம். இதற்காக இருதயம் மற்றும் மகப்பேறு மருத்துவக் குழுவின் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களில் 156 பேருக்கு பிரசவத்தில் சிக்கல் ஏற்பட்டது. அதில் 20 பேர் மரணம் அடைந்தனர்.
இருதயநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 5 வகைப் பிரிவினருக்கு சிக்கல் அதிகமாக இருந்தது. உலோக செயற்கை வால்வுகள் பொருத்தப்பட்ட பெண்கள், இருதய தசை வலுவிழந்த பெண்கள், நுரையீரல் ரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள், இருதய வால்வுகள் சுருக்கம் அடைந்தவர் (குறிப்பாக மைட்டல் வால்வு சுருக்கம்), கருத்தரிப்பு ஆன பின்னர்தான் இருதய நோய் இருக்கிறது என கண்டுபிடித்தவர்கள் என பிரித்தோம்.
இவர்களுக்கு பிரவத்தின்போது அதிகமான சிக்கல் இருக்கிறது என்பதை கண்டுபிடித்தோம். இவர்களில் உலோக வால்வு பொருத்தப்பட்டவர்கள், இருதய தசை வலுவிழப்பு உள்ளவர்கள், நுரையீரல் ரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் ஆகியோரின் இறப்பு அதிகளவில் இருப்பதை கண்டறிந்தோம்.
கர்ப்பிணிகளில் 60 சதவீதம் பெண்களுக்கு கர்ப்பம் ஆன பின்னர்தான் இருதய நோய் இருப்பதே அவர்களுக்கு தெரிய வந்தது. இதற்கு முன்னர் செய்யப்பட்ட ஆய்வில் கர்ப்பமாவதற்கு முன்னர் இருதயநோய் இருப்பதை அறிந்து, மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று, அதன்பின்னர் கர்ப்பமானவர்களை ஆய்வு செய்யாமல், கர்ப்பமாகி குழந்தை பிறப்பத்தில் சிக்கல் ஏற்படுவர்களை விட, பிரச்னை இல்லாமல் குழந்தை பெறுகின்றனர்.
எனவே இருதய நோய் இருக்கிறதா என்பதை ஆய்வின் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு ஆய்வில் இருதய நோய் பாதிப்பு இருந்தாலும், மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று நமது உடம்பை கர்ப்பத்திற்கு தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் கர்ப்பமானால் பிரச்னைகள், சிக்கல்கள் குறைவாக வருகிறது.
பள்ளி மாணவர்களுக்கான வளரிளம் பருவத்திற்கான உடல் நலத்திற்கான பரிசோதனையின்போது கண்டுபிடிக்கும் பெண்களை, தீவிரமாக தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். வளரிளம் பெண்களிடம் இருதய நோய் பாதிப்பு கண்டறியப்பட்டால், அவர்கள் திருமணம் முடிவடைந்து , குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் வரையில் தொடர்ந்து கண்காணிக்கும் முறையை கொண்டு வந்தால், கர்ப்பிணிகள் பிரசவத்தில் உள்ள சிக்கல்களையும், மரணங்களையும் தவிர்க்க முடியும்.
இருதயத்திற்கு உலோகத்தினால் செய்யப்பட்ட வால்வுகளை பொருத்தும்போது ரத்தம் தானாக அடைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காக ரத்தம் உறையும் அளவை குறைக்கும் மருந்து தருகிறோம். இந்த மருந்தின் அளவு மாறுபடும்போது சில பெண்களுக்கு அது தேவைப்படலாம். இது போன்று மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் பெண்கள், கர்பமான உடன் மாத்திரையை எடுப்பதை நிறுத்தி விடுகின்றனர்.
இதனால் உலோக வால்வுகள் அடைக்கப்பட்டு, மூச்சு திணறிய நிலையில் சிகிச்சைக்கு வருகின்றனர். அவ்வாறு வருவபர்கள் இறந்து விடுகின்றனர். இறந்த 20 பேரில் 6 பெண்களுக்கு உலோக வால்வு பொருத்தப்பட்டதுடன், 3 பேர் தானாக மாத்திரையை நிறுத்தி உள்ளனர். இது போன்ற செயல்களை செய்யாமல் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இருதய நோய் அறிகுறி மற்றும் இருதய நோய் உள்ளவர்களுக்கு மூச்சு விடுவத்தில் சிரமம், இருதயம் படபடவென அடித்தல் மற்றும் ஏற்கனவே நாம் செய்த செயல்கள் தற்பொழுது சிரமமாக இருக்கலாம். படுக்கும்போது மூச்சு வாங்குதல் போன்ற அறிகுறிகள் இருந்தால், மருத்துவரை அணுகி பார்த்துக் கொள்ள வேண்டும்.
பெண்களுக்கான கர்ப்ப கால சிகிச்சையை அளிப்பதற்கான பரிசோதனைகளை சிறப்பாக செய்து விடுகின்றனர். ஆனால் பெண்கள் கர்ப்பபமான உடன் உடனடியாக சிகிச்சை பெறுவதற்கு வராமல் தாமதமாக வருகின்றனர். இதனால் நோய் கண்டறிவதில் காலதாமதம் ஏற்படுகிறது. கர்ப்பிணிகளில் அனைத்து இருதய நோயாளிக்கும் சிக்கல் வரும் என கூற முடியாது.
கர்ப்பகால இருதய நோய் பாதிப்புகளை 5 வகையாக பிரிக்கலாம் . அவர்களில் முதல், 2ஆம் வகையில் உள்ளவர்களுக்கு எந்த பிரச்னையும் வருதில்லை. 3 மற்றும் 4வது வகைகளில் வருபவர்களுக்கு பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்பதால் உடனடியாக சிகிச்சை செய்து, இருதயம் மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் குழுவின் மூலம் சிகிச்சை கொடுத்தால், பிரசவத்தின்போது சிக்கல் வருவதை தவிர்க்க முடியும்.
5 வது வகையில் உள்ளவர்கள் பிரசவம் ஆகாமல் இருப்பதுதான் நல்லது. ஆனாலும் அவர்களும் பிரசவமாவதற்கு, அவர்களுக்குத் தேவையான துணையாக இருந்து வருகிறோம். இவர்களுக்கு மருந்து அளித்தல், மைட்டல் வால்வு எனப்படும் வால்வு சுருக்கம் இருந்தால், அவர்களுக்கு பிரசவ காலத்திலேயே பலூன் சிசிச்சை மூலமாக வால்வை விரிவடையச் செய்கிறோம்.
இதனால் நிறைய பேரை காப்பாற்ற முடிகிறது. இது போன்ற சிகிச்சை முறைகள் அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்படுகிறது. இதனால் நோயாளிகளை காப்பாற்ற முடிகிறது. சில நேரங்களில் அறுவை சிகிச்சை தேவைப்படலாம். ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு அனைத்து பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
தொடர்ந்து சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் தேரணி ராஜன் கூறுகையில், “இருதயவியல் துறையில் பதிவேடுத் தொடங்கப்பட்டு, 5 ஆண்டுகளாக கர்ப்பிணி பெண்களில் யாருக்கு இருதய நோய் இருக்கிறது என்பதையும், இதனால் குழந்தைக்கு ஏற்படும் பாதிப்பு, மரணம் ஆகியவற்றை கணக்கெடுத்தோம்.
அதில் அளிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் பள்ளி மாணவர்களுக்கான பல்வேறு மருத்துவப் பரிசோதனை முறைகள் நடைபெற்று வருகிறது. வளரிளம் பெண்களுக்கு இருதய நோய் உள்ளதா என்பது குறித்தும் பரிசோதனை செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது அதற்கான சிகிச்சையை எடுத்துக் கொள்ளலாம்.
கர்ப்பமடைந்த பெண்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மருத்துவச் சிகிச்சையை மற்றவர்களை விட கூடுதல் கவனமாக அளிக்க வேண்டும். வளரிளம் பெண்களை முழுவதும் பரிசோதனை செய்து விட்டால், பாதிப்பினை குறைக்கலாம். இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு குழந்தை போதும் என நிறுத்திக் கொள்ள வேண்டும். மேலும் குழந்தையை பெற்றுக் கொள்ள வேண்டாம் என அறிவுரையை வழங்கலாம். இந்த ஆய்வினைப் பயன்படுத்தி பெண் குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைக்கலாம். இந்த ஆய்வின்படி, அரசு கூறும் விதிமுறைகளையும் பின்பற்றலாம்" என்று கூறினார்.
இதையும் படிங்க: உலகில் முதல் முறையாக எச்ஐவி பாதித்த தம்பதிக்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சை!