கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கின்போது மளிகை கடைகள், காய்கறி கடைகள், இறைச்சி கடைகள் கட்டுப்பாடுடன் திறந்திருக்கலாம் என அறிவிக்கப்பட்டது. பொதுவாக ஞாயிற்றுக்கிழமை என்றால் அனைவரது வீடுகளிலும் அசைவம் சமைப்பது வழக்கம்.
அதேபோல், இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஊரடங்கு உத்தரவை பொருட்படுத்தாமல் காலை முதல் இறைச்சி கடைகளில் மக்கள் குவிந்தவண்ணம் உள்ளனர். இதன் காரணமாக இறைச்சி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இறைச்சிகளின் விலையில் அதிகளவில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
ஒரு கிலோ ஆட்டுக்கறி ரூ. 760-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ. 950-க்கு விற்கப்படுகிறது. எனினும் ஆட்டு இறைச்சி பிரியர்கள் 1 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் நின்று ஏமாற்றத்துடன் வீட்டிற்கு திரும்பினர்.
பிற மாநிலங்களில் இருந்து ஆடுகள் வருவதை நிறுத்திவிட்டதால் ஆடுகள் தட்டுபாடு ஏற்பட்டு ஆட்டு இறைச்சியின் விலை அதிகரித்துள்ளது. இதேபோல், ஊரடங்கு காரணமாக மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் மீன்கள் விலை கிலோவிற்கு ரூ.100 முதல் ரூ. 500 வரை உயர்ந்துள்ளது.
கிலோ ரூ. 800-க்கு விற்கப்பட்ட வஞ்சரம் மீன் தற்போது ரூ.1200 -க்கு விற்கப்படுகிறது. கிலோ ரூ.200-க்கு விற்கப்பட்ட சங்கரா மீன் தற்போது ரூ. 300-க்கு விற்கப்படுகிறது. கிலோ ரூ. 250-க்கு விற்கப்பட்ட ஷீலா மீன் தற்போது ரூ.500-க்கு விற்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, கோழிக்கறி சாப்பிட்டால் கரோனா வைரஸ் பரவும் என்பது வதந்தி எனப் பொதுமக்களுக்கு தெரிந்த நிலையில், மக்கள் கோழிக்கறி வாங்கத் தொடங்கியுள்ளனர். இதனால், கிலோ ரூ. 150 முதல் ரூ. 200 வரை கோழி விற்கப்படுகிறது.
இதையும் படிங்க:சென்னையில் நாளை மறுநாள் இறைச்சி விற்பனை செய்ய தடை