சென்னை: மதுரவாயல் வானகரம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (48). இவரது தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்ட பெண் ஒருவர் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், உங்களுக்கு லோன் சேங்சன் ஆகி இருப்பதாகவும் கூறி லோன் வேண்டுமா எனக்கேட்டுள்ளார்.
முதலில் மறுத்த நடராஜன் பிறகு தனக்கு இரண்டு லட்சம் ரூபாய் கடன் கேட்டுள்ளார். அதற்கு தேவையான ஆவணங்களையும், லோன் வழங்குவதற்கான பணி கட்டணமாக ஆறாயிரம் ரூபாய் செலுத்த அந்த பெண் கூறியுள்ளார். நடராஜனும் அதனை நம்பி வங்கி, கூகுள் பே மூலமாக பணம் செலுத்தியுள்ளார்.
10 நாட்களில் லோன் வந்து விடும் என அந்த பெண் கூறிய நிலையில் குறிப்பிட்ட நாட்களாகியும் கடன் தொகை வராததால் அந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். ஆனால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்திற்கு நேரில் சென்று விசாரித்தபோது தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த நடராஜன் இது குறித்து மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பல திடுக்கிடும் தகவல்கள்
இந்த புகார் மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினருக்கு மாற்றப்பட்டது. இதனடிப்படையில் வடபழனி குமரன் காலனியைச் சேர்ந்த பாரத் என்பவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
![கைது செய்யப்பட்டவர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-02-loancheating-script-7202290_15072021114907_1507f_1626329947_162.jpg)
பட்டதாரி இளைஞரான பாரத், வங்கி சார்ந்த கால் சென்டரில் டெலிகாலராக பணியாற்றி வந்துள்ளார். அந்த அனுபவத்தை கொண்டு வடபழனி குமரன் காலனி பகுதியில் கால் சென்டர் போல் அமைத்து 10 பெண்களை வேலைக்கு அமர்த்தியுள்ளார்.
ஐசிஐசிஐ போன்ற தனியார் வங்கி மற்றும் பஜாஜ் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி கடந்த இரண்டு வருடங்களாக தமிழ்நாடு முழுவதும் பலரிடம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
ப்ராசசிங் கட்டணம் என ஆறாயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய்வரை கட்டணம் வசூலிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். மேலும் வாடிக்கையாளர்களின் தொலைபேசி எண்களை பணம் கொடுத்து வாங்கி இந்த மோசடியை செய்துள்ளார்..
இதையடுத்து அவரை கைது செய்த காவல் துறையினர் அவரிடமிருந்து ஐபோன் உள்ளிட்ட 7 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.மோசடி, தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று (ஜூலை14) சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ஸ்கிம்மர் கருவி பொருத்தி பல கோடி ரூபாய் கொள்ளை - 3 பேர் கைது