இது குறித்து சென்னை ஐ.ஐ.டியின் வேதிப் பொறியியல் துறையின் இணை பேராசிரியர் டாக்டர் வினு கூறுகையில், ”விவசாய கழிவுப் பொருள்களான அரிசி வைக்கோல், கரும்பு பாகாஸ் மற்றும் மர பட்டைகள், நிலக்கடலையின் தோல் போன்றவற்றை பிளாஸ்டிக் கழிவுகளுடன் சேர்த்து எரிப்பதால் பயோ ஆயில் உற்பத்தி ஆகிறது.
பயோ எண்ணெய் உற்பத்தி செய்வதற்கான பொதுவான முறைகளில் ஒன்றாக, பைரோலிசிஸ் அல்லது எரிபொருள் கூறுகளாக உயிரியக்கக் கூறுகளை வெப்பத்தால் தூண்டும் முறை இருக்கிறது.
வேளாண் கழிவுகளின் பைரோலிசிஸால் உற்பத்தி செய்யப்படும் பயோ எண்ணெயில் பூமியிலிருந்து எடுக்கப்படும் எரிபொருள்களைக் காட்டிலும் அதிக அளவு ஆக்ஸிஜன் ஏற்றங்கள் உள்ளன. ஹைட்ரஜன் நிறைந்த பிளாஸ்டிக்குடன் ஆக்ஸிஜன் நிறைந்த வேளான் கழிவுப் பொருட்களை பைராலிஸிஸ் செய்வதன்மூலம், குறைந்த ஆக்ஸிஜன் அளவுள்ள எண்ணெய்யாக மாற்றமுடியும்.
உயிரியலின் பைரோலிசிஸில் பிளாஸ்டிக்கை ஒரு துணைப் பொருளாகப் பயன்படுத்துவதால், பயோ எண்ணெய்களை உற்பத்தி செய்யவும், பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக்கை மறுபயன்பாடு செய்யவும் முடியும்.
இதனை பயன்படுத்தும்போது புகையின் அளவையும் குறைக்கிறது. இதனால் இயந்திரத்தின் செயல்பாட்டின் செயல்திறன் மற்றும் எரிபொருளின் காலம் அதிகரிக்கும்.
பிளாஸ்டிக்குடன் உயிர் எரிபொருள்களை பைரோலிசிஸ் செய்வதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் பயோ எண்ணெய்கள், தற்போது உற்பத்தி செய்யப்படும் ரிபைனரி எண்ணெய்யின் ஆற்றலைக் கொண்டது.
சீமைக் கருவேல மரப்பட்டை, அரிசி வைக்கோல், கரும்பு பகாஸ், நிலக்கடலை ஓடு, மரத்தூள் மற்றும் மரம் உள்ளிட்ட பல வகையான உயிர்வளங்களை பைரோலைஸ் செய்ய மைக்ரோவேவ் அடுப்பைப் பயன்படுத்தினர்.
மைக்ரோவேவ் உதவியுடன் பைரோலிசிஸ் செயல்முறை என்பது வேளாண் கழிவுகள், பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் மறுசுழற்சி செய்ய முடியாத முகக்கவசங்கள் உள்ளிட்ட பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பலவிதமான திடக்கழிவுகளிலிருந்து வளங்களை மீட்டெடுப்பதற்கான ஒரு நிலையான மற்றும் ஆற்றல்மிக்க அணுகுமுறையாகும்” என்றார்.