சென்னை: திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்திருந்தார். அம்மனுவில், மதுபானங்கள் கண்ணாடி பாட்டில்களில் அடைத்து விற்கப்படுவதால், அவற்றை வாங்கி, மது அருந்துவோர், பாட்டில்களை உடைத்து வயல்வெளிகளில் வீசிச் செல்கிறார்கள்.
கண்ணாடி பாட்டில்கள் எளிதில் மக்கும் தன்மை கொண்டவை அல்ல என்பதால், அவை சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துகின்றன. வயல் வெளிகளில் பாட்டில்கள் வீசப்படுவதால் விவசாயிகள் காயமடைகின்றனர்.
புதுச்சேரியில், பாக்கெட்களிலும், நெகிழி பாட்டில்களிலும் மதுபானங்கள் விற்கப்படுகின்றன. தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளில் கண்ணாடி பாட்டில்களைப் பயன்படுத்தத் தடைவிதிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு, இன்று (பிப்ரவரி 9) பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், “நெகிழிதான் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், கண்ணாடிகளைப் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட முடியாது. கண்ணாடி பாட்டில்களை வயல்வெளியில் வீசுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி மனுவில் கோரிக்கை வைக்கப்படவில்லை” எனக் கூறி வழக்கைத் தள்ளுபடிசெய்தனர்.
மேலும், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் கண்ணாடி பாட்டில்களை மறுசுழற்சி செய்ய முடியும் எனத் தெரிவித்த நீதிபதிகள், மதுபானம் மட்டுமல்லாமல், பால்கூட கண்ணாடி பாட்டில்களில் வழங்கப்படுவதாகவும், தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கண்ணாடி பாட்டில்கள் பயன்படுத்தப்படுவதால், இந்தக் கோரிக்கையை ஏற்க முடியாது எனத் தெளிவுபடுத்தினர்.
இதையும் படிங்க: ராமஜெயம் கொலை வழக்கு: சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து நீதிமன்றம் உத்தரவு