சென்னை: மின்திருட்டில் ஈடுபடுபவர்களிடம் 50 விழுக்காடு தொகையை அபராதமாக வசூலித்து விட்டால், குற்றவாளியுடன் சமரசம் செய்து கொள்வதா? என தமிழக அரசிடம் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மின்சார திருட்டு தொடர்பான வழக்கு ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மின்சார திருட்டு தொகையில் 50 விழுக்காடு பணத்தை வசூலித்து விட்டு, அந்த பிரச்னை முடித்து வைக்கப்படுவதாக மின்சாரத்துறை சார்பில் ஆஜரான வழக்குரைஞர் கூறினார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி,
‘மின்சார திருட்டுக்கும், தங்கநகை உள்ளிட்ட வேறு பொருட்களை திருடுவதற்கும் வித்தியாசம் எதுவும் இல்லை. திருடுவது என்பது குற்றம். அந்த திருட்டு குறித்து வழக்குப்பதிவு செய்யாமல், எப்படி அந்தக் குற்றத்தை முடித்து வைக்க முடியும்? மின்சார திருட்டை யார் கணிக்கிறது? திருடியவர்களிடம் இருந்து எவ்வளவு தொகை வசூலிக்கப்படுகிறது?’ என்று அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பினார்.
அதற்கு மின்சாரத்துறை சார்பில் ஆஜரான வழக்குரைஞர், ‘உதவி செயற்பொறியாளர் மின்சார திருட்டை கணக்கிட்டு, திருடியவர்களிடம் இருந்து 50 விழுக்காடு தொகையை வசூலித்து விட்டு, பிரச்னையை முடித்து வைப்பார்’ என்று பதிலளித்தார்.
இதையடுத்து நீதிபதி, ‘ஒரு தொழிற்சாலை ரூ.5 கோடி அளவுக்கு மின்சாரத்தை திருடியுள்ளது. அந்த நிறுவனத்திடம் இருந்து ரூ.2.50 கோடியை வாங்கிக் கொண்டு மின்சார திருட்டு பிரச்னையை கை விட்டு விடுவீர்களா? மின்சார திருட்டு குறித்து காவல் துறையில் புகார் செய்ய மாட்டீர்களா?’ என்று மீண்டும் கேள்விகளால் துளைத்தெடுத்தார்.
![undefined](https://s3.amazonaws.com/saranyu-test/etv-bharath-assests/images/ad.png)
அதற்கு மின்சாரத் துறை சார்பில் ஆஜரான வழக்குரைஞர், ‘காவல் துறையில் புகார் செய்வது இல்லை. மின்சாரத் துறை உதவி செயற்பொறியாளரே சமரசம் செய்து வைத்து விடுவார்’ என்றார்.
‘அப்புறம் எப்படி மின்சாரத் துறை லாபகரமாக செயல்படும்? போக்குவரத்து துறை, மின்சாரத் துறை எல்லாம் நஷ்டத்தில் இயங்குகிறது என்று சொல்வதற்கு இதுபோன்ற செயல்கள்தான் காரணம்.
உதவி செயற்பொறியாளர் திருட்டு பிரச்னைக்கு சமரசம் செய்யும் அதிகாரம் கொண்டவர் என்றால், இதுபோன்ற நடவடிக்கையில் ஊழலுக்கு வழி வகை செய்யாதா? ஒரு திருட்டு என்றால், அதுகுறித்து காவலரிடம்தான் புகார் செய்யவேண்டும்.
காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். திருட்டு குற்றத்தை சமரசம் செய்ய முடியாது. அப்படி இருக்கும்போது, மின்சார திருட்டில் பாதி தொகையை வசூலித்து விட்டு, எப்படி குற்றவாளியுடன் அதிகாரிகள் சமரசமாக செல்ல முடியும்?’ என்று நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து, ‘இந்த கேள்விகளுக்கு எல்லாம் மின்சாரத் துறை செயலர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும். குற்ற வழக்குகள் குறித்து தமிழக சிறப்பு அரசு பிளீடர் தம்பித்துரை நிபுணத்துவம் பெற்றவர் என்பதால், அவரை இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்துக்கு உதவும் நபராக நியமிக்கிறேன். இந்த வழக்கு விசாரணையை வருகிற 28-ம் தேதிக்கு தள்ளிவைக்கிறேன்’ என்று நீதிபதி உத்தரவிட்டார்.