நெடுஞ்சாலைத் துறை மண்டல கணக்காளர்கள் பணி நியமனத்தில் 2016ஆம் ஆண்டுமுதல் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் எம்.எல். ரவி பொதுநல வழக்குத் தொடர்ந்திருந்தார்.
அந்தத் தேர்வில் தேர்வான 10 பேரின் தேர்வை ரத்துசெய்ய அரசு செயலாளர் பரிந்துரை செய்திருந்ததாகவும், ஆனால் நெடுஞ்சாலைத் துறை இயக்குநர் எட்டு பேரின் தேர்ச்சியை மட்டுமே ரத்துசெய்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.
டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு போல, விடைத்தாள் மாற்றம் செய்து முறைகேடு மூலம் தேர்வு முடிவுகளை நெடுஞ்சாலைத் துறை வெளியிட்டுள்ளதாகவும், ஏற்கனவே மண்டல கணக்காளர் மீது நான்கரை லட்ச ரூபாய் அளவிற்கு லஞ்ச ஒழிப்பு வழக்கை சிபிஐ பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்தத் தேர்வு குறித்து முழுமையாக விசாரணை நடத்த சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கைவைத்திருந்தார்.
இந்நிலையில், இன்று இவ்வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு தலைமை கணக்காளர் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர், தலைமைக் கணக்காளர் நடத்திய விசாரணையில், தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளதாகவும், 16 விண்ணப்பதாரர்களின் தேர்வு முடிவுகள் ரத்துசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர், முறைகேடுகளில் தொடர்புடையவர்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராகக் குற்றப் பத்திரிகை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து, தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து பதில் மனுவை தாக்கல்செய்யும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜூன் மாதம் இரண்டாவது வாரத்துக்குத் தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: பேருந்து இயக்க நேரம்: வேலூர் போக்குவரத்து மண்டலம் அறிவிப்பு