சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தையில் சரக்கு ஏற்றி வந்த இரண்டு லாரி ஓட்டுநர்களும், வியாபாரி ஒருவருக்கும் கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர், செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் நேற்று (ஏப்ரல் 27) சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தையில் ஆய்வு மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து, அங்குள்ள வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த நிலையில், கோயம்பேடு சந்தையில் கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு பொதுமக்கள் நேரடியாக வர தடை செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு வணிக வளாகத்தில் தற்பொழுது நடைபெற்று வரும் சில்லறை விற்பனை முழுவதுமாக தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு மார்க்கெட்டில் இயங்கி வந்த பூ மார்க்கெட் மற்றும் பழங்கள் அங்காடி வியாழன் முதல் மாதவரம் நிலையத்துக்கு மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை பூ மார்க்கெட் மற்றும் பழ அங்காடி அங்கேயே செயல்படும்.
கோயம்பேடு மார்க்கெட்டிற்கு காய்கறிகள் மற்றும் உணவு தானியங்கள் ஏற்றிவரும் வெளிமாநில வாகனங்கள் மற்றும் வெளிமாவட்ட வாகனங்கள் மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை பொருட்களை இறக்கி வைத்தபின் வெளியேற்றப்படும்.
அதிகாலை முதல் 7.30 மணி வரை வியாபாரிகள் சில்லறை விற்பனைக்கு காய்கறிகள் வாங்க அனுமதிக்கப்பட்டுள்ளது" இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு முட்டை வழங்கிய அமைச்சர்