நாடு முழுவதும் 40 நாள்களுக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவை நீட்டித்தும் கரோனா வைரசின் தாக்கம் இன்னமும் குறையவில்லை. தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 600 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதன்மூலம் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6,009ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் பொதுமக்களைப் போல தினமும் கரோனா தொற்றால் பாதுகாப்பில் ஈடுபடும் காவலர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னையில் ஆயுதப்படை காவலர்கள் இருவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், அவர்களுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவர்கள் இருவரும் கோயம்பேடு மார்க்கெட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனால் தொற்று அங்கிருந்து இருவருக்கும் பரவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும், மத்திய குற்றப்பிரிவில் பணிபுரிந்து வந்த காவலர் ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர் ராயபுரத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
பல்லாவரம் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்த மற்றொரு காவலருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: சென்னையில் 3 ஆயிரத்தைத் தாண்டிய கரோனா பாதிப்பு!