சென்னை: 'எல்லா நண்பர்களுக்கும், எனது குடும்பத்தினருக்கும் நான் சீக்கிரமாக ரெடியாகிவிட்டு மீண்டும் வருவேன். யாரும் இதனால், கவலைப்பட வேண்டாம். நான் திரும்பவும் மாஸ் எண்ட்ரி கொடுப்பேன். என்னோட கேம் என்னை விட்டு போகாது; நீங்க நான் ரிட்டர்ன் வருவேனு நம்பிக்கையா இருங்க.. லவ் யூ ஃப்ரண்ட்ஸ் அண்டு ஃபேமிலி' உயிரிழந்த மாணவி பிரியா(17), தனது வாட்ஸ் அப்பில் கடைசியாக ஸ்டேட்டஸ் வைத்திருந்துள்ளார்.
மாணவி பிரியாவின் மரணம் குறித்து IPC 174 சந்தேக மரணம் (அ) இயற்கைக்கு மாறான மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். அத்துடன் சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் பணியிலிருந்த இரண்டு மருத்துவமனை மருத்துவர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மருத்துவர்களின் அஜாக்கிரதையே கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் மரணத்திற்கு காரணமாக உள்ளது என்று அமைச்சர் கூறிய நிலையில் மருத்துவ விசாரணை குழு மூலம் சம்பந்தப்பட்ட மருத்துவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, மருத்துவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தால் மட்டுமே பிரியாவின் உடலை வாங்குவோம் என உறவினர்கள் போராட்டம் நடத்திய நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பிரியாவின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டது.
முன்னதாக, கொளத்தூர் அரசு புறநகர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சையில் பாதிப்புகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கும் மாணவிக்கு நடந்த சிகிச்சைக்கையின் விளைவாக உடலின் ரத்த ஓட்டம் பாதிப்படைந்து சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட பல உள்ளுறுப்புகளும் படிபடியாக செயலிழந்தது. இதனால், கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா பரிதாபமாக இன்று (நவ.15) உயிரிழந்தார். இச்சம்பவம் மாணவியின் குடும்பத்தினர் மட்டுமில்லாது அனைவரிடத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு போதிய மருத்துவ கட்டமைப்புகளைக் கொண்ட மாநிலமாகவும், இங்குள்ள மக்களுக்கு தரமான சிகிச்சைகள் அளிக்கப்படுவதையும் கண்டுதான், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் ஆண்டுதோறும் மருத்துவ சிகிச்சைக்காக தமிழ்நாட்டிற்கு வந்து செல்கின்றனர். இதனிடையே, அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் நோயாளிகளிடம் தகுந்த அனுசரணையுடனும், சிகிச்சையில் போதிய கவனத்துடனும் உள்ளார்களா? என இச்சம்பவம் கேள்வியை எழ வைத்துள்ளது.
இதையும் படிங்க: தவறான சிகிச்சையால் வீராங்கனை பிரியா மரணம்: 2 மருத்துவர்கள் சஸ்பெண்ட்!