திருப்பூர் மாவட்டம், அங்கேரிபாளையத்தைச் சேர்ந்த டி.வி.எஸ். ராஜாசிம்மன் நாயுடு என்பவர் சென்னையைச் சேர்ந்த கே.எம்.விஷ்ணுபிரியா என்பவருடன் இணைந்து வியாபாரம் செய்து வந்தார். லாபத்தில் முறையாகப் பங்கு தராததால், விஷ்ணுபிரியாவுடன் வியாபாரத் தொடர்புகளை ராஜாசிம்மன் துண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த விஷ்ணுபிரியா, இரண்டு கார்களையும், செல்போன்கள், சிசிடிவி ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றை எடுத்துச் சென்று விட்டதாகக் கூறி, சென்னை சூளைமேடு காவல் நிலையத்தில் ராஜாசிம்மன் புகார் அளித்தார்.
இதேபோன்று கடந்த 2018 ஆம் ஆண்டு, தனது திருமணத்திற்காகப் பார்த்து பேசி பின்னர் நிராகரித்த உமாராணி என்பவருடன் விஷ்ணு பிரியா சேர்ந்துகொண்டு, தன்னிடம் பணம் பறிக்கும் நோக்கத்தில் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வித குற்றச்சாட்டும் தன்மீது இல்லாத நிலையில் பொய் புகாரில் விசாரணை மேற்கொண்ட ஆய்வாளர் ஞானசெல்வம், பிரச்சினையை தீர்ப்பதாகக் கூறி 5 லட்ச ரூபாய் பணம் கேட்டதாகவும், 4 லட்ச ரூபாய் ஏற்பாடு செய்து கொடுத்தபோது, மூவருக்கும் சேர்த்து 20 லட்ச ரூபாய் வேண்டும் என மிரட்டியதாக ஆயிரம் விளக்கு காவல் நிலையம், துணை ஆணையர் மற்றும் காவல் ஆணையர் ஆகியோரிடம் புகார் அளித்துள்ளார்.
அதில், தன்னிடமிருந்து மோதிரங்கள், மொபைல் போன், வாட்ச், கிரெடிட் கார்ட் என 8 லட்ச ரூபாய் மதிப்புள்ளவற்றைப் பறித்துவிட்டதாகவும் ஆய்வாளர் மீது குற்றம் சாட்டியள்ளார். இப்புகார் மீது நடவடிக்கை எடுக்காததையடுத்து ஆயிரம் விளக்கு காவல் நிலைத்தில் ஆய்வாளர் ஞானசெல்வம், உமாராணி, விஷ்ணுபிரியா ஆகியோர் மூவர் மீதும் அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்கக் கோரி, எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி இ.எம்.கே. யஷ்வந்த் ராவ் இங்கர்சால், மனுதாரர் ராஜா சிம்மன் நாயுடுவின் புகாரில் முகாந்திரம் இருப்பதால், உரிய முறையில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் எனவும், அதுகுறித்த இறுதி அறிக்கையை விரைவில் தாக்கல் செய்ய வேண்டுமெனவும் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.