தமிழ்நாடு சட்டபேரவை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறயுள்ள நிலையில், மாநில வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், சென்னை மாநகராட்சி ஆணையருமான பிரகாஷ், ரிப்பன் மாளிகையில் இன்று வெளியிட்டார்.
இந்த வரைவு வாக்காளர் பட்டியல், 4,5,6,8,9,10,13 ஆகிய சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும், வாக்குச்சாவடிகளிலும் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொதுமக்கள் தங்களது பெயர் மற்றும் தங்களது குடும்பத்தினர் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என சரிபார்த்து கொள்ள வேண்டும்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் உள்ளவர்கள் மற்றும் 01.01.2021 அன்று 18 வயது நிறைவு அடைபவர்கள் (01.01.2003) ஆம் தேதிக்கு முன்பாக பிறந்தவர்கள்) 6ஆம் எண் படிவத்தை பூர்த்தி செய்யவேண்டும் என்றும், பெயர்கள் நீக்கம் தொடர்பாக 7ஆம் எண் படிவத்தை பூர்த்தி செய்யவேண்டும். பதிவுகளில் திருத்தம் தொடர்பாக 8 ஆம் எண் படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
சட்டப்பேரவைத் தொகுதிக்குள்ளேயே ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயர்ந்து புதிய வசிப்பிடத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 8A-யினை பூர்த்தி செய்தும், அதற்கான ஆவண ஆதார நகலினை இணைத்து சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல அலுவலரின் அலுவலகத்தில் 16.11.200 முதல் 1512.2020 முடிய உள்ள காலத்திற்குள் விண்ணப்பிக்கலாம்.
பொதுமக்கள் இணையதளம் (www.elections.tn.gov.in) மூலமாகவும் தங்களுடைய பெயர்கள் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம்.
சென்னை மாவட்டத்தில் மூன்றாயிரத்து ,751 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு அதன் அடிப்படையில் இன்று வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 297 வாக்குச்சாவடிகளும், குறைந்தபட்சமாக எழும்பூர் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் 169 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
நடைபெற்று முடிந்த வாக்காளர் பட்டியல் திருத்தத்தின்படி, சென்னை மாவட்டத்தில் 19 லட்த்து 39 ஆயிரத்து 694 ஆண் வாக்காளர்களும், 19 லட்சத்து 99 ஆயிரத்து 995 பெண் வாக்காளர்களும் மற்றும் ஆயிரத்து 15 இதர வாக்காளர்களும் என மொத்தம் 39 லட்சத்து 40 ஆயிரத்து 701 வாக்காளர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. மொத்தம் 20 ஆயிரத்து 161வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக வேளச்சேரி தொகுதியில் 3 லட்சத்து 6 ஆயிரத்து 189 வாக்காளர்களும், குறைந்தபட்சமாக துறைமுகம் சட்டப்பேரவைத் தொகுதியில் ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 481 வாக்காளர்களும் உள்ளனர். “ என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.