சென்னை: சோழிங்கநல்லூர், காந்திநகர் ஏரிக்கரையைச் சேர்ந்தவர் முத்து (55). இவர் கூலி வேலை செய்கிறார். இவரது முதல் மனைவி சரசு, இரண்டாவது மனைவி புண்ணியவதி (46). இதில் முதல் மனைவிக்கு ஒரு மகனும், இரண்டாவது மனைவிக்கு 2 மகன், 2 மகள்களும் உள்ளனர்.
புண்ணியவதி சென்னை மாநகராட்சியில் (Urbansar Sumeet) ஒப்பந்த அடிப்படையில் துப்புரவுப் பணியாளராக பணிபுரிந்து வருகிறார். புண்ணியவதி, அவரது மகள் லட்சுமியின் கணவர் ஜெயராஜ் உடன் தவறான உறவில் இருப்பதாக கூறி முத்து அடிக்கடி சண்டையிட்டு வந்த நிலையில் குடிபோதையில் நேற்றிரவு கழுத்தை அறுத்துக் கொலை செய்து விட்டு செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
மேலும், தாயின் கழுத்தை அறுக்க முயன்றபோது தடுக்க முயன்ற மற்றொரு மகள் சந்திராவிற்கு இடது கையில் காயம் ஏற்பட்டு 11 தையல் போடப்பட்டுள்ளது. கொலை வழக்குப் பதிவு செய்த செம்மஞ்சேரி காவல் துறையினர், முத்துவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.
தாலிச் செயினை திருடிய சிறுவன்: சென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகர் 29வது தெருவில் வசித்து வருபவர், ஸ்ரீராம். இவர் கோட்டூர்புரத்தில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ராதா (46). இந்த நிலையில், நேற்று இரவு தில்லை கங்கா நகரில் பெருமாள் கோயிலுக்குச் சென்று விட்டு சாலையில் நடந்து சென்று வீட்டின் அருகே வந்தபோது, ராதாவின் பின்னால் வந்த 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் ராதாவின் கழுத்தில் இருந்த தாலிச் சங்கலியை பறித்துள்ளார்.
இதில் தாலி மட்டும் ராதாவின் கையில் சிக்கிக் கொள்ளவே, அதன் மீதிச் செயினை சிறுவன் பறித்துச் சென்றுள்ளார். பின்னர், இது குறித்து ஆதம்பாக்கம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய சிறுவனை தேடி வருகின்றனர்.
கஞ்சா பறிமுதல்: சென்னை மூவசரம்பட்டு பகுதியில் போதைப் பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, அப்பகுதியை காவல் துறையினர் தொடர்ந்த கண்காணித்து வந்தனர். இந்நிலையில், மூவசரம்பட்டு, கல்லுக்குட்டை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் இருசக்கர வாகனத்தில் சுற்றி வந்த மூவரை பிடித்து சோதனையிட்டனர்.
அப்போது அவர்களிடம் 20 கிலோ கஞ்சா, ஒன்பது கிராம் மெத்தம் பெட்டமைன், 830 டைடால் வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் போதைப்பொருள் விற்ற தொகை 10 ஆயிரம் ரூபாய் இருந்தது. அவற்றுடன் இருசக்கர வாகனத்தையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து நடந்த விசாரணையில், அவர்கள் புளியந்தோப்பைச் சேர்ந்த ரியாஸ் (29), பட்டினம்பாக்கத்தை சேர்ந்த ராஜேஷ் (43) மற்றும் நந்தனம் சி.ஐ.டி நகரைச் சேர்ந்த பிரசாந்த் (24) என்பதும், ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்ததும் தெரிய வந்துள்ளது. பின்னர், இது குறித்து பழவந்தாங்கல் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, மூவரையும் கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: Chennai Crime News: பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முன்னாள் போலீஸ்.. தாயை ஏமாற்றிய மகன் கைது..