சென்னை: எருக்கஞ்சேரியில் கடந்த ஜூன் 16ஆம் தேதி நடைபெற்ற முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாள், நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைமை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் மற்றும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ ஆகியோர் குறித்து விமர்சித்து பேசியிருந்தார்.
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசிய வீடியோ பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், அந்த வீடியோவை தனது ட்விட்டரில் பதிவிட்ட குஷ்பூ, பெண்கள் குறித்து இவ்வளவு கேவலமாக பேசும் நிர்வாகிகள் திமுகவில் இருப்பதை கண்டு வேதனை அடைவதாகவும், இது போன்ற நபர்களை தலைமை வேடிக்கை பார்ப்பதாகவும் வேதனையுடன் பதிவிட்டிருந்தார். மேலும், சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை போலீசார் கைது செய்ய வேண்டும்" என்றும் வலிறுத்தியிருந்தார்.
இதனையடுத்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்வதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டார். அதன் பின்னர், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது கொடுங்கையூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், கூட்டத்தினரை கவர்வதற்காக நகைச்சுவையுடன் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும், யாரையும் குறிப்பிட்டு தவறாக பேசவில்லை எனவும் கூறிருந்தார்.
இந்த மனு சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம், ஜாமீன் கேட்பதற்கு முன் குடும்ப உறுப்பினர்களுடன் அமர்ந்து பேச்சை கேட்குமாறு அறிவுறுத்தினார். அரசு தரப்பில் ஆஜரான பெருநகர தலைமை குற்றவியல் வழக்கறிஞர் தேவராஜன் ஆஜராகி, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி இதேபோல் தொடர்ந்து பேசி வருவதாகவும், விசாரணை நிலுவையில் உள்ளதால் ஜாமீன் வழங்கக் கூடாது எனவும் வாதிட்டார்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி அல்லி, உயர் பதவியில் இருப்பவர்கள் மற்றும் மாற்று கட்சியினர் குறித்து இழிவாகவும், அவதூறாகவும் மனுதாரர் பேசி வருவது, ஏற்கனவே இதே போன்ற 3 வழக்குகள் உள்ளன போன்றவற்றை சுட்டிக்காட்டி, சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: திமுக கூட்டத்தில் ‘பாரத் மாதா கி ஜெய்’ கோஷம் ; காரில் சென்றவர்களுக்கு அடி உதை!