சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் பள்ளிக் கல்வித் துறையின்கீழ் 790 பள்ளிகள் உள்ளன. இதில், பெரும்பாலான பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும் என்று கவுன்சிலர்கள், பொதுமக்கள் என பலரும் கோரிக்கை வைத்தனர்.
அதைத் தொடர்ந்து, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் சென்னை மாவட்டம் உட்பட 139 பள்ளிகள் மாநகராட்சி கல்வித்துறை நிர்வாகத்தின் கீழ் ஒப்படைக்கப்பட்டது. அதேபோல், சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பள்ளிகளை மேம்படுத்தும் நடவடிக்கையை சென்னை மாநகராட்சி எடுத்து வருகிறது. அப்பணிகள், சிட்டிஸ் மற்றும் சிங்கார சென்னை 2.0 ஆகிய திட்டங்களின் வாயிலாக நடைபெற்று வருகிறது.
சென்னை மாநகராட்சியில் பள்ளிகளில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்கள் இரண்டு ஆண்டுகளுக்கும்மேல் நிரப்பப்படாமல் உள்ளது என பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சென்னையில் உள்ள 35-க்கும் மேற்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை என்பது மிகவும் கவலைக்குரியதாக இருந்து வருகிறது.
இது குறித்து 123-வது வார்டு உறுப்பினர் கூறியபோது, "123-ஆவது வார்டில், வன்னியபுரம், பீமன்ன கார்டன் ஆகிய இரண்டு பள்ளிகளும் தலைமை ஆசிரியரின்றியே இயங்குகின்றன. ஜூலை மாதம் நடந்த மாமன்றக் கூட்டத்தில் இது குறித்துப் பேசியுள்ளேன். அதற்கு ஆணையர் 5 மேல்நிலைப் பள்ளிகள், 8 உயர்நிலைப் பள்ளிகள், 32 நடுநிலை, தொடக்கப் பள்ளிகள் என 45 பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை என்பது உண்மைதான். ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் சிறப்பு கவுன்சலிங் மூலம் அவை நிரப்பப்படும் என கூறினர். ஆனால் இன்று வரை நிரப்படவில்லை என்பது வேதனை அளிக்கிறது" என அவர் தெரிவித்தார்.
அதேபோல், அ.தி.மு.க கவுன்சிலர் ஜே.ஜான் கூறியபோது, "அம்பத்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட கொரட்டூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 15-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்களானது காலியாக இருக்கிறது. இது குறித்து மாமன்ற கூட்டத்தில் பேசியபோது அதற்கு கவுன்சிலிங் நடத்தப்பட்டு ஆசியர்கள் நிரப்படும் என்று துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். அதேபோல், அவதிப்பட்டு மேல்நிலைப் பள்ளியில் 22 ஆசிரியர்கள் இல்லை. தற்காலிக ஆசிரியர்களைக்கொண்டு சமாளிக்கிறார்கள்" என்று குற்றம்சாட்டினார்.
மேலும் இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது. "பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் முன்னதாக 281 பள்ளிகள் இயங்கிவந்தன. அதேப்போல் சென்னை மாநகராட்சியின் விரிவாக்கம் செய்யப்பட்டதால், கூடுதலாக139 அரசுப் பள்ளிகளும் மாநகராட்சிப் பள்ளிகளாக மாறப்பட்டன. அதனால் இந்த பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக இருக்கிறது.
தலைமை ஆசிரியர்கள் பணியிடம் சில பள்ளிகளில் மட்டும் நிரப்பப்படாமல் இருக்கிறது. மேலும், மாநகராட்சி பள்ளிகளில் ஒப்பந்த ஆசிரியர்களை நியமிப்பதற்குத்தான் எங்களுக்கு அதிகாரம் இருக்கிறது. நிரந்தர ஆசிரியர்களை நியமிப்பது பற்றி பள்ளிக்கல்வித் துறைதான் இறுதி முடிவு எடுக்க முடியும். இதனால் பள்ளிக்கல்வித் துறையிடம் பேச இருக்கிறோம். மேலும் ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் குறித்து கணக்கெடுப்பு பணிகள் முடிந்து விட்டது" என தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து பெருநகர் சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் நிலைக்குழுத் தலைவர் விஸ்வநாதனிடம் கேட்டபோது, "கவுன்சிலிங் ஆகஸ்ட் மாதத்திலே முடிந்துவிட்டது, தற்போது சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது, மேலும் இது தொடர்பான பணிகளும் நடைபெற்று வருகிறது விரைவில் ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்" என்று உறுதியளித்தார்.
இதையும் படிங்க: பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம்.. ஆசிரியர் தினத்தில் ஓவிய ஆசிரியரின் நூதன போராட்டம்!