சென்னை: வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்த நிலையில், மிக்ஜாம் (Michaung) புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பெய்த கனமழையால், பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மழையால் சாலையில் உள்ள மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, நேற்று முதல் மழையின் அளவு குறைந்த நிலையில், பல்வேறு முக்கிய சாலைகளில் தேங்கிய நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி முழு வீச்சில் ஈடுபட்டிருந்தது.
முக்கிய சாலைகளில் போக்குவரத்து சீராகியுள்ள நிலையில், புழல் ஏரியில் நீர் திறக்கப்பட்டு, உபரி நீரானது வெளியில் வருவதால் மஞ்சம்பாக்கம் மற்றும் வடபெரும் மாம்பாக்கம் இடையே போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், கணேசபுரம், செம்பியம், வில்லிவாக்கம், துரைசாமி, ரங்கராஜபுரம், சைதாப்பேட்டை - அரங்கநாதன், சி.பி. சாலை, வியாசர்பாடி, திருவொற்றியூர், மாணிக்கம் நகர், சூளைமேடு லயோலா, கதிர்வேடு ஆகிய சுரங்கப் பாதைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மின்சாரப் பணி: வெள்ள நீர் வடிந்த இடங்களில் பகுதி பகுதியாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், வெள்ளம் வடியாத பகுதிகளில் முழுவதுமாக பணி முடிந்த பிறகு மின்சாரம் வழங்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
80 சதவீத போக்குவரத்து: சென்னை மாநகரில் 80 சதவீத பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் மட்டும் பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. நிவாரணப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு பேருந்துகள் அனுப்பப்படுவதாக மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது.
ரயில்கள் இயக்கம்: சென்னை கடற்கரை, தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள், எழும்பூரில் இருந்து புறப்பட்டு, மீண்டும் எழும்பூர் புறநகர் ரயில் நிலையத்தை வந்தடையும். இந்த மார்க்கத்தில் 30 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது.
மேலும் சென்னை கடற்கரை, திருவள்ளூர் மற்றும் அரக்கோணம் இடையே மற்றும் சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி இடையேயும் 30 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது. திருவொற்றியூர்–கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் ஒரு மணிநேரத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படுவதாக சென்னை ரயில்வே கோட்டம் சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது.
தொலைத்தொடர்பு சேவை பாதிப்பு: சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் தொடர்ந்து 2வது நாளாக தொலைத் தொடர்பு சேவையானது பாதிப்படைந்துள்ளது. இதனால், குறிப்பிட்ட இடங்களில் தொலைத் தொடர்பு சேவையானது சீர்செய்யபட்டு வருகிறது.
பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்: மிக்ஜாம் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள கடும் சேதங்களை சரி செய்திட ரூ.5,060 கோடி நிவாரணம் வழங்கக் கோரி, பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். சாலைகள், பாலங்கள், என பல்வேறு வகைகளில் சேதமடைந்துள்ளதாகவும் முதலமைச்சர் கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளார்.
விமான நிலையம்: மிக்ஜாம் புயல் பாதிப்பிலிருந்து சென்னை விமான நிலையம், இயல்பு நிலைமைக்கு விமான சேவைகளை முழு வீச்சில் தொடங்கியுள்ளது. நேற்று (டிச.05) 136 விமானங்கள் இயக்கப்பட்ட நிலையில், இன்று (டிச.06) முழுவீச்சில் 250 விமானங்களும் இயக்கப்படும் என விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் பங்குகளில் அலைமோதும் மக்கள்: தொடர் மழையால், ஜெனரேட்டர்கள் மற்றும் வண்டிகளுக்கு பெட்ரோல், டீசல், ஆகியவை வாங்க பெட்ரோல் பங்குகளுக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர். மேலும் தொடர் மழையால், பெட்ரோல், டீசல் சேமிப்பு தொட்டிகளில் மழை நீர் புகுந்துள்ளதால், சம்பந்தப்பட்ட பெட்ரோல் நிறுவனங்கள் தொடர்ந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகம்: மழையால் வெள்ளத்தில் சூழ்ந்த பகுதிகளான வேளச்சேரி, பள்ளிக்கரனை உள்ளிட்ட பகுதிகளில், இன்று தாம்பரம் விமான படை தளத்திலிருந்து, ஹெலிகாப்டர் மூலம் உணவுகள் வழங்கப்பட உள்ளது.
படகுகள் மூலம் மீட்பு: சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் காவல் துறை மற்றும் பேரிடர் மீட்புத் துறை சார்பில், படகுகள் மூலம் பொதுமக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை படகுகள் மூலமாக அளித்து வருகின்றனர். பள்ளிக்கரனை பகுதியில் இதுவரை 22 குழந்தைகள் உள்பட 283 நபர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.
ஏ.டி.எம் வாசலில் நீண்ட வரிசையில் மக்கள்: சென்னையில் தற்போது மின்சாரம், இணையம் மற்றும் தொலைத் தொடர்பு சேவைகள் முழுவதுமாக பாதிக்கபட்டுள்ளதால், யு.பி.ஐ பரிவர்த்தனை, டெபிட், கிரெடிட் கார்டுகள் பரிவர்த்தனை முழுவதும் பாதிக்கபட்டுள்ளது. இதனால் ஏ.டி.எம் வாசல் மற்றும் வங்கிகளில் பணம் எடுப்பதற்காக மக்கள் குவிந்துள்ளனர்.
பால் விநியோகம்: “இன்று அதிகாலை முதல் பல்வேறு பகுதிகளில் ஆவின் பால் விற்பனையகங்களில் ஆய்வு மேற்கொண்டேன். நிலைமை நன்கு சீரடைந்து வருகிறது. வாடிக்கையாளர்கள் பதற்றமடைந்து அன்றாட தேவையை விட, அதிக அளவில் பால் வாங்கி இருப்பு வைக்க வேண்டாம். அம்பத்தூர் பண்ணையில் வெள்ளம் வடிந்து, அப்பகுதி சீரடையாத காரணத்தால், அங்கிருந்து விநியோகிக்கப்படுவதில் சிறிது காலதாமதம் ஏற்படலாம்” என பால்வளத் துறை அமைச்சர், மனோ தங்கராஜ் தனது சமுக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அரக்கோணம் அருகே வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி படுகாயம்!