தமிழ்நாடு முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாம் அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. சென்னையில் மட்டுமே மே மாதத்தில் 7ஆயிரத்திற்கும் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருந்தனர்.
அதனைக் கட்டுப்படுத்தும் விதமாக மாநகராட்சி வீடு வீடாகச் சென்று கரோனா பரிசோதனை செய்வது, சிறப்பு முகாம்கள் நடத்துவது போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டது.
அதன் விளைவாக தினசரி கரோனா தொற்று ஆயிரத்து ஐநூறுக்கு கீழாக படிப்படியாகக் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், மூன்றாவது அலை வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே, எதிர்காலத்தில் மூன்றாவது அலை உருவாகும் பட்சத்தில் அதனை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது.
அதன்ஒரு பகுதியாக, மூன்றாம் அலை வரவிடாமல் தடுப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆராயப் பல்துறை வல்லுநர்கள் அடங்கிய சிறப்பு பணிக்குழுவை அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
மருத்துவர்கள், தொற்று நோய் குறித்த ஆராய்ச்சியாளர்கள், சுகாதாரத்துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் அந்த சிறப்புப் பணிக்குழுவில் இடம்பெறவுள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வரும் எனக் கூறப்படுகிறது.