சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சொத்துவரி மற்றும் வணிகவரி முறையாக செலுத்த வேண்டும் என மாநகராட்சி தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இருப்பினும், பல்வேறு நிறுவனங்கள் மற்றும் வீடுகள் பல ஆண்டுகளாக சொத்துவரி செலுத்தாமல் இருந்து வருகின்றன.
அவ்வாறு வரி செலுத்தாத நிறுவனங்கள் அல்லது கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பி சீல் வைக்கும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. அதேபோல், மாநகராட்சிக்குச் சொந்தமான இடங்களில் வைக்கப்பட்டுள்ள கடைகளும் சரிவர வாடகை செலுத்தவில்லை என்றால், அவற்றிற்கும் சீல் வைக்கின்றனர். அந்த வகையில், சென்னை ரிச்சி தெருவில் 90 கடைகள், பாரிமுனை நயினியப்பன் தெருவில் உள்ள 30 கடைகள் என மாநகராட்சிக்குச் சொந்தமான 120 கடைகள் நீண்ட காலமாக வணிக வரி செலுத்தாமல் இருந்ததால், மாநகராட்சி அதிகாரிகள் கடைகளுக்கு நோட்டீஸ் ஒட்டி சீல் வைத்தனர்.
சீல் வைக்கப்பட்ட கடைகளுக்கு உரிமையாளர்கள் நிலுவைத் தொகையினை வரைவு காசோலையாக உடனடியாக செலுத்தும் பட்சத்தில், உயர் அதிகாரிகளின் அனுமதி பெற்று கடைகள் திறந்து விடப்படும் என சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மாண்டஸ் புயல்: மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளுக்குச் செல்லத் தடை