சென்னை: அதிமுக ஆட்சியின் போது குறைவான விலையில் மக்களுக்கு உணவு வழங்குவதற்காக மாநிலம் முழுவதும் அம்மா உணவகங்கள் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் அது திமுக ஆட்சிக்கு வந்த பின்னரும் செயல்பட அனுமதி பெற்று இயங்கிக் கொண்டு வருகின்றது.
ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இருந்து மிகவும் குறைவான அளவு வருவாய் மட்டுமே கிடைப்பதால் சுமார் 780 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது அம்மா உணவகங்களை மேம்படுத்த சென்னை மாநகராட்சி கூடுதல் நிதி ஒதுக்கியுள்ளது.
சென்னையில் இயங்கும் அம்மா உணவகங்களில் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில், கடந்த காலங்களை விட இரண்டு மடங்கு வருவாய் கூடுதலாகவும், அம்மா குடிநீருக்கு குறைந்த அளவிலும் சென்னை மாநகராட்சி நிதி ஒதுக்கியுள்ளது. 2023-24ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா இரண்டாவது முறையாக கடந்த திங்கள் கிழமை தாக்கல் செய்தார். இதில் கல்வி, உட்கட்டமைப்பு, சுகாதாரம் போன்றவைகளை இணைத்து மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது.
சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில், சென்னையில் இயங்கும் அம்மா உணவகங்களுக்கு கடந்த காலங்களை விட இரண்டு மடங்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை மாநகராட்சி முழுவதும் 400க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் இயங்கும் நிலையில் இதில் 3 ஆயிரம் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நாள்தோறும் ஆயிரக்கணக்கான எளிய மக்கள் அம்மா உணவகத்தினால் பயனடைந்து வருகின்றனர்.
இதனால் கடந்த ஆண்டு அம்மா உணவகத்தின் பணியாளர்களின் ஊதியம், அரசி, பருப்பு, காய்கறி கொள்முதல், பராமரிப்பு என சுமார் 120 கோடி ரூபாய் செலவும், 14 கோடி ரூபாய் வரவும் சென்னை மாநகராட்சிக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அம்மா உணவகத்தின் பராமரிப்பிற்காக மட்டும் 2021-22ல் ரூ.4.38 கோடியும், 2022-23ல் 4.85 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில், 2023-24ல் அம்மா உணவகங்களில் சமையல் உபகரணங்கள், கட்டட சீரமைப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்த நிதியாண்டில் பராமரிப்புக்காக மட்டும் ரூ.9.65 கோடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் அம்மா உணவகத்தில் பணி புரியும் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க கடந்த ஆண்டு (2022-23) ரூ.50.50 கோடி முதலில் ஒதுக்கப்பட்டது. அதற்கு பிறகு அதை திருத்தி ரூ. 41.70 கோடி ஒதுக்கப்பட்டது, இந்த நிலையில் இந்த ஆண்டு சற்று அதிகரித்து ரூ.42.30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அம்மா உணவகத்திற்கு நிதியை அதிகரித்த மாநகராட்சி, அதிமுக ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட அம்மா குடிநீர் திட்டத்திற்கு நிதியை சற்று குறைத்துள்ளது. கடந்த 2022-23ஆம் ஆண்டு ரூ. 5.50 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், 2023-24ஆம் ஆண்டிற்கு 5.15 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ''எழுதுங்கள் என் கல்லறையில்... நான் கோபாலபுரத்து விசுவாசியென்று'' - அமைச்சர் துரைமுருகன்