சென்னை மாநகராட்சி மேயர் தலைமையில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் சென்னையில் உள்ள சாலைகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சென்னை மாநகராட்சியின் பிப்ரவரி மாதத்திற்கான கூட்டம் ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் தலைமையில் கூடியது. இந்த கூட்டம் தொடங்கியதும் துருக்கியில் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மொத்தம் 74 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருந்த நிலையில் அதில் 73 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பெருநகர சென்னை மாநகராட்சியில் 844 நவீன பேருந்து நிழற்குடைகளை புனரமைத்து இயக்குதல் மற்றும் மாற்றம் அடிப்படையில் நான்கு ஆண்டுகளுக்கு பொது தனியார் கூட்டாண்மை முறையில் புதுப்பித்தல் மற்றும் பராமரிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
புவிசார் தொழில்நுட்பம் மூலம் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கட்டிடங்களை ட்ரோன் மூலமாகவும் வீடு வீடாக சென்று சீர் ஆய்வு செய்யப்பட்டதில் அளவீடு உபயோகத்தன்மை மாறுபாடு உள்ள கட்டிடங்களை அளவீடு செய்து வருவாய் பெருக்க குறைந்த விலைப்புள்ளி (5 கோடி) அளித்த நிறுவனங்களுக்கு பணியாணை வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம் TURIF 2022-2023 திட்டத்தின் கீழ் சென்னையில் உள்ள 1,2,3,4,6,10,12,13,14,15 ஆகிய மண்டலங்களில் உள்ள 370 உட்புற தட தார் சாலைகளை மேம்படுத்தும் பணிக்கு 17 சிப்பங்களுக்கான ஒப்பத்தாரர்களுக்கு பணி ஆணை வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம் TURIF 21-22 திட்டத்தின் கீழ் மண்டலம் ஒன்று முதல் 15 வரை 300 எண்ணிக்கையிலான உட்புற தார் சாலைகளை மேம்படுத்தும் பணிக்கு 30 சிப்பங்களுக்கான ஒப்பந்ததாரர்களுக்கு பணி ஆணை வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
மேலும் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மண்டலம் 1,2,3,5,11,13 மற்றும் 14 யில் 233 எல்லைக்குள்ளான உட்புற சாலைகளை மேம்படுத்தும் பணிக்காக 20 சிப்பங்களுக்கு குறைந்த விலை புள்ளி அளித்த ஒப்பந்ததாரருக்கு பணியினை வழங்கவும் அத்துடன் மண்டலம் 3,4,6,8,9,10,13 மற்றும் 15 யில் 34 எண்ணிக்கையிலான பேருந்து தடை சாலைகளை மேம்படுத்தும் பணிக்காக 13 சிற்பங்களுக்கு குறைந்த விலை புள்ளி அளித்த ஒப்பந்ததாரர்களுக்கு பணி ஆணை வழங்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
இக்கூட்டத்தில், நேரமில்லா நேரத்தில் பேசிய 12 வது வார்டு கவி கணேசன், "சென்னையில் ஜீரோ கார்பேஜ் ( Zero Garbage) என்ற நிலை வர வேண்டும். அது முதலமைச்சர் ஸ்டாலின் மேயராக இருந்த காலத்தில் அவருடைய ஆசை, அதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தார். அதற்கு பிறகு தற்போதை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மேயராக இருந்த போது அதை பின்தொடர்ந்தார்.
2011 ஆண்டு ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு அதை தவறவிட்டது. ஜீரோ கார்பேஜ் ( Zero Garbage) பணி என்பது தாய் மற்றும் தலைமை பணி ஆகும். ஜீரோ கார்பேஜ் ( Zero Garbage) என்பது சாத்தியம் இல்லை என்று பலர் கூறுகிறார்கள் அது சாத்தியம் என்னுடைய வார்டில் அமல்படுத்தி உள்ளேன். திடக்கழிவு மேலாண்மையை Macro, Micro அளவில் மாநகராட்சி யோசித்து பணியாற்ற வேண்டும். 6 நிலை குழு உள்ளது அதில் புதிதாக திடக்கழிவுக்கு என குழு அமைக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: "மகன் விட்டுச் சென்ற திட்டங்களை செயல்படுத்துவேன்" - ஈவிகேஎஸ் இளங்கோவன்!