சென்னை: முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து இன்று (மார்ச் 27) சென்னை மாமன்ற உறுப்பினர் கூட்டத்திற்கு கருப்பு சட்டை அணிந்து வந்த காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர்கள், நாளை (மார்ச் 28) பட்ஜெட் மீதான விவாதம் முடிந்த உடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். மக்களவையில் இருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து நேற்று (மார்ச் 26) நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அனைத்து மாநிலங்களிலும் உள்ள தலைநகரங்களில் காந்தி சிலை முன்பாக காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இன்று, தமிழ்நாடு சட்டப் பேரவையில் ராகுல் காந்திக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் சட்டப் பேரவை உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்தும், ராகுல் காந்திக்கு ஆதரவாக பதாகைகளை ஏந்தியும் பேரவைக்கு வருகை தந்தனர்.
அதேபோல, இன்று நடந்த சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்திற்கு (2023-2024 பட்ஜெட் தாக்கல்) காங்கிரஸ் கட்சி மாமன்ற உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து வருகை தந்தனர். மாமன்றத்திற்கு வரும் முன் ராகுல் காந்திக்கு ஆதரவாகவும் பாஜகவுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர்.
சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த சென்னை காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர்கள் தலைவர் திரவியம் கூறுகையில், "சிறப்பான பட்ஜெட் வரவேற்கக் கூடிய ஒரு பட்ஜெட். மேயர் பிரியா தாக்கல் செய்த சிறப்பான பட்ஜெட்டை காங்கிரஸ் சார்பாக வரவேற்கிறோம்.
இன்றைய தின எங்களுடைய சக உறுப்பினர்களும் மாமன்ற கூட்டத்திற்கு கருப்பு உடை அணிந்து வந்திருக்கின்றோம். இந்திய திருநாட்டை 50 ஆண்டுகாலம் வழி நடத்திய இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உடைய எங்கள் தலைவர் ராகுல் காந்தியை அசிங்கப்படுத்துகின்ற வகையில் சாதாரண குற்றத்திற்காக எதற்காக இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வேண்டும். இது மட்டும் இல்லாமல் அந்த வழக்கைக்கு மேல் முறையீடு செய்ய உள்ள நிலையில், சமயம் பார்த்து மக்களவையில் இருந்து நீக்கம் செய்துள்ளார்கள்.
இந்த அனைத்தையும் கண்டிக்கின்ற வகையில் நாங்கள் அனைவரும் கூட்டத்திற்கு கருப்பு உடை அணிந்து வந்துள்ளோம். நாளையும் கருப்பு உடை அணிந்து வருவோம். நாளை மாமன்ற கூட்டம் நிறைவடைந்த உடன் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்த உள்ளோம். ராகுல் காந்தி பேசினால் அவர்களின் ஆட்சிக்கு ஆபத்து என்பதால் அவரை நாடாளுமன்றத்தில் பேச அனுமதிக்கவில்லை. விரைவில் இது பொய் வழக்கு என நிரூபிப்போம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ராகுல் காந்தி தகுதி நீக்கம்: தொடரும் சங்கல்ப் சத்தியாகிரகம்! கருப்பு பட்டை அணிந்து எம்.பிக்கள் போராட்டம்!