சென்னை வேளச்சேரி சட்டப்பேரவைத் தொகுதியில் பாகம் எண் 92இல் விவிபேட் உள்ளிட்ட வாக்குச்சாவடி பெட்டிகளை இருசக்கர வாகனத்தில் எடுத்துச்சென்ற விவகாரத்தால் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து வேளச்சேரியில் 92இல் ஆண் வாக்காளருக்கு மட்டும் மறு வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.
முன்னதாக நேற்று (ஏப். 16) மாலை தேர்தல் நடத்தும் அதிகாரி சுப்புலட்சுமி தலைமையில் பாதுகாக்கப்பட்ட வாகனத்தில் துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் பாதுகாப்புடன் வாக்களிக்கும் மையத்திற்கு வாக்குச்சாவடி பெட்டிகளை எடுத்துவந்தனர்.
இன்று (ஏப். 27) காலை 7 மணிமுதல் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 7 வரை நடைபெறவுள்ளது. மறு வாக்குப்பதிவு நடைபெறும் மையத்திற்கு காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
548 வாக்குகள் கொண்ட இந்த வாக்குச்சாவடியில் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த வாக்களிக்க வருபவர்கள் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்து வாக்களித்துவருகின்றனர்.
வாக்காளர்கள் வாக்களிக்கச் செல்லும் முன்பு அவர்களுக்கு சானிடைசர் வழங்கப்படுகிறது. வாக்களிக்கும் மையத்திற்கு வந்த சென்னை மாவட்டத் தேர்தல் அலுவலர் பிரகாஷ் போதிய பாதுகாப்புடன் மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறதா என ஆய்வுசெய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பிரகாஷ், “மத்திய பாதுகாப்புப் படை, மாநில பாதுகாப்புப் படையுடன் தேர்தல் அலுவலர்கள் தலைமையில் தீவிர பாதுகாப்புப் பணியானது நடைபெற்றுவருகிறது.
எனவே எந்த அசம்பாவிதமும் இல்லாமல் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றுவருகிறது. மாலை தேர்தல் முடிந்த பின்னர் அரசியல் கட்சிப் பிரநிதிகள், தேர்தல் அலுவலர்கள் முன்னிலையில் வாக்குப்பெட்டி சீல்வைக்கப்பட்டு கொண்டுசெல்லப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ’பல தசாப்தங்களாக எங்களை மகிழ்வித்தீர்கள்’ - ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!