சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த சனிக்கிழமை(அக்.21) அன்று தொடங்கி உள்ளது எனச் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனையடுத்து தற்போது தென் தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில், மழை பெய்து வருகிறது. மேலும், வடகிழக்கு பருவமழைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகச் சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, சென்னை மாநகராட்சி சார்பில் அனைத்து நிலைகளிலும் 23 ஆயிரத்து அலுவலர்கள், பணியாளர்கள் தயார்நிலையில் உள்ளனர். மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பிலுள்ள 22 சுரங்கப் பாதைகளில் மழைநீரினை வெளியேற்ற மோட்டார் பம்புகள் தயார்நிலையில் உள்ளன. மேலும், டீசல் மற்றும் நீர்மூழ்கி மின்சார பம்புகள், பாப்காட், ஜே.சி.பி. ஆம்பிபியன், மர அறுவை இயந்திரங்கள், ஜெனரேட்டர்கள், கனரக / இலகுரக வாகனங்கள் உள்ளிட்ட 1 ஆயிரத்து 35 இயந்திரங்கள் மற்றும் வாகனங்கள் தயார்நிலையில் உள்ளன என்று அண்மையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மேயர் ஆர்.பிரியா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், வடகிழக்குப் பருவமழைக்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள், தேனாம்பேட்டை மண்டலம், லாயிட்ஸ் காலனி உர்பேசர் சுமீத் பணிமனை வளாகத்தில் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பேரிடர் மீட்புப் பணிகளுக்காக வைக்கப்பட்டுள்ள பெருநகர சென்னை மாநகராட்சியின் வாகனங்கள், மீட்பு உபகரணங்கள், மர அறுவை இயந்திரங்கள், மோட்டார் பம்புகள், ஜெனரேட்டர்கள் உள்ளிட்ட பேரிடர் மீட்பு வாகனங்கள் மற்றும் இயந்திரங்களையும், உர்பேசர் சுமீத் நிறுவனத்தின் பணிமனையில் மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் இன்று (அக்.24) ஆய்வு செய்தார்.
இது குறித்து மாநகராட்சி சார்பில் கூறும் போது, "வடகிழக்கு பருவமழைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து துறைகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். மேலும் சென்னை மாநகராட்சியில் பருவமழைக்கு முன்னதாகவே முக்கிய சாலைப்பணிகள் முடிக்கப்படும். தற்போது, தேங்கும் மழை நீரை அகற்றுவதற்காக உயர்திறன் கொண்ட டீசல் என்ஜின் மோட்டார் பம்புகள், எலக்ட்ரிக்கல் நீர் மூழ்கி மோட்டார் பம்புகள், பல்வேறு குதிரைத்திறன் கொண்ட மோட்டார் பம்புகள், டிராக்டர்களுடன் கூடிய மோட்டார் பம்புகள் என 845 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன.
மேலும், வாகனங்களுடன் கூடிய மர அறுவை இயந்திரங்கள், கையினால் மேற்கொள்ளப்படும் மர அறுவை இயந்திரங்கள், டெலஸ்கோபிக் புருனர், கார்பேஜ் சக்கர் வாகனங்கள், ஆம்பிபியன் சூப்பர் சக்கர் வாகனங்கள், ஜே.சி.பி இயந்திரங்கள், பாப்காட் இயந்திரங்கள், ரோபோடிக் பல்வகைப் பயன்பாடு இயந்திரங்கள் உள்ளிட்ட 446 பேரிடர் மீட்பு வாகனங்கள் மற்றும் இயந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன" என்று தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: தமிழக மக்களே - அக்டோபர் 28 வரை குடையை மறந்துறாதீங்க!